நாய்கள் விஷம் வைத்து கொலை விலங்கு ஆர்வலர்கள் கொதிப்பு
நாய்கள் விஷம் வைத்து கொலை விலங்கு ஆர்வலர்கள் கொதிப்பு
ADDED : டிச 20, 2024 05:51 AM

உத்தரகன்னடா: கார்வாரின், துாகதபைல் அருகில் உள்ள நெடுஞ்சாலையில், நுாற்றுக்கணக்கான நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டு கிடந்தன. இதனால், விலங்குகள் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
உத்தரகன்னடா, கார்வாரின் துாகதபைல் அருகில் உள்ள சிர்சி - எல்லாபுரா நெடுஞ்சாலையில் நேற்று காலை, துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், வாகனத்தை நிறுத்தி பார்த்த போது, சாலை ஓரத்தில் நுாற்றுக்கணக்கான நாய்கள் இறந்து கிடந்தன. சில நாய்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த எல்லாபுரா போலீசார், நாய்களின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
வேறு எந்த பகுதியிலோ, தெரு நாய்களின் தொல்லை தாங்காமல், அவற்றை பிடித்து நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்து அடித்தும், உணவில் விஷம் வைத்தும் கொன்றுள்ளனர். உடல்களை அங்கேயே வீசியுள்ளனர். இதை, விலங்குகள் ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
போலீசாரும் இது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.
நாய்கள் இறந்து கிடந்த இடத்தின் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.