ஏரியில் நாய்களுக்கு தடை விலங்கு ஆர்வலர்கள் விரக்தி
ஏரியில் நாய்களுக்கு தடை விலங்கு ஆர்வலர்கள் விரக்தி
ADDED : ஜன 17, 2025 11:15 PM

மைசூரு: குக்கரஹள்ளி ஏரி பகுதியில், நாய்கள், பறவைகள், ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவு அளிக்க, மைசூரு பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் விலங்குகள் ஆர்வலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா, 'மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்' என பல்கலைக்கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
மைசூரு, குக்கரஹள்ளியில் அமைந்துள்ள ஏரியை பராமரிக்கும் பொறுப்பு, மைசூரு பல்கலைக்கழகம் ஏற்றுள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பலரும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். சிலர், தங்களுடன் செல்ல பிராணிகளையும் அழைத்து வருகின்றனர்.
அத்துடன் ஏரிக்குள் தெரு நாய்களும் சுற்றித்திரிகின்றன. அவற்றுக்கு, நடைபயிற்சி வருவோர், உணவளிக்கின்றனர். இதனால் ஏரி வளாகத்துக்குள் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர், பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, ஏரி நுழைவாயிலில், 'நாய்கள், பறவைகள், ஏரியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு அளிக்க வேண்டாம். செல்லப்பிராணிகளை அழைத்து வர வேண்டாம்' என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள், 'இது உச்ச நீதிமன்றம் விதித்த விதிகளுக்கு எதிரானது' என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் ஆர்வலருமான மேனகாவிடமும் முறையிட்டனர்.
அவரும், இவ்விஷயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி, பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த விவகாரத்தில் விலங்குகள் ஆர்வலர்கள் கூறியதாவது:
குக்கரஹள்ளி ஏரி, 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை, 90 தெரு நாய்கள் தங்கள் வீடாக கருதுகின்றன.
அவற்றுக்கு உணவு அளிப்பதை தடுப்பது சட்டத்துக்கு எதிரானது. அவற்றுக்கு உணவு அளிப்பதை தடுத்தால், பசியால் மனித - விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும். நாய்களை பட்டினி போடுவது சட்டப்படி தவறு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.