நாய் வளர்ப்பு மையங்கள் பதிவு செய்ய கெடு விலங்குகள் நல வாரியம் உத்தரவு
நாய் வளர்ப்பு மையங்கள் பதிவு செய்ய கெடு விலங்குகள் நல வாரியம் உத்தரவு
ADDED : நவ 09, 2024 09:20 PM
புதுடில்லி:'செல்லப் பிராணி விற்கும் கடைகள் மற்றும் நாய் வளர்ப்பு மையங்கள் ஒரு மாதத்துக்குள் டில்லி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை எனில் 'சீல்' வைக்கப்படும்' என விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் செல்லப்பிராணிகள் விற்கும் கடைகள் மற்றும் நாய் வளர்ப்பு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தங்கள் நிறுவனங்களை வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படும். டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாய் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துல் விதிமுறை - 2017 மற்றும் செல்லப் பிராணி விற்பனை விதிமுறை - 2018 ஆகியவற்றின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதேபோல, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் - 1960ன் விதிமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்யாத நிறுவனங்களும் மூடப்படும்.
டில்லி அரசின் 'இ- டிஸ்ட்ரிக்ட்' என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விலங்குகளின் நலனை மேம்படுத்தவும், நிறுவனங்கள் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு இயங்குவதையும் உறுதி செய்வதற்காகவே நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து விலங்குகள் நல வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆஷர் ஜேசுதாஸ், “செல்லப் பிராணிகள் விற்கும் நிறுவனங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை, சுகாதாரம் மற்றும் விலங்குகளின் நிலை குறித்து எங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. நீதிமன்றத்தின் உத்தரவு நாளிதழ்கள், வானொலி மற்றும் எப்.எம்., சேனல்களில் விளம்பரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,”என்றார்.
எஸ்.ஓ.எஸ்., என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்த்திக் சத்யநாராயணன், “வாரியத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. வெளிநாட்டு செல்லப்பிராணிகளின் சட்டவிரோத கடத்தல் தடுக்கப்படும். மேலும், விலங்குகளின் பராமரிப்பை உறுதி செய்யும். இது காலத்தின் தேவை,”என்றார்.
விலங்கு ஆர்வலர் ரித்திமா சரஸ்வத், “தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஏராளமான செல்லப் பிராணிகள் மற்றும் நாய்கள் வளர்ப்பு மையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அடிப்படைத் தேவைகள் கூட இல்லை. பல கடைகளில் விலங்குகள் மோசமான முறையில் பராமரிக்கப்படுகின்றன. சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விலங்குகளை கையாள பயிற்சி பெறாத பலர் நாய்க்குட்டி விற்பனை செய்து வருகின்றனர். எனவே, இந்த உத்தரவு அவசியம் மட்டுமின்றி அவசரத் தேவை,”என்கிறார்.