சென்னப்பட்டணாவில் அனிதா குமாரசாமி? காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்!
சென்னப்பட்டணாவில் அனிதா குமாரசாமி? காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்!
ADDED : அக் 18, 2024 07:38 AM

பெங்களூரு: சென்னப்பட்டணா தொகுதி, தன் கையை விட்டு போகாமல் இருப்பதற்காக மத்திய அமைச்சர் குமாரசாமி வியூகம் வகுக்கிறார். தன் மகன் நிகிலுக்கு பதிலாக, மனைவி அனிதாவை களமிறக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இடைத்தேர்தல்
இவரால் காலியான சென்னப்பட்டணா உட்பட, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. மற்ற தொகுதிகளை விட, சென்னப்பட்டணா தொகுதிக்கு, காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்துள்ளது. குறிப்பாக துணை முதல்வர் சிவகுமார், இந்த தொகுதியை கைப்பற்றி குமாரசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என, உறுதி பூண்டுள்ளார்.
இதன் மூலம் பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், தன் தம்பி சுரேஷின் தோல்விக்கு பழி தீர்க்க வேண்டும் என்பது, சிவகுமாரின் எண்ணமாகும். இதுவரை சென்னப்பட்டணா தொகுதிக்கு, அவர் அவ்வளவாக சென்றது இல்லை. ஆனால் சமீப நாட்களாக அவ்வப்போது, தொகுதிக்கு செல்கிறார்; மக்களை சந்திக்கிறார்; நல திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதேபோன்று குமாரசாமியும், தன் தொகுதியை விட்டு தரக்கூடாது என்பதில், உறுதியாக நிற்கிறார். மத்திய அமைச்சராக இருந்தாலும், ராம்நகருக்கு அடிக்கடி வந்து செல்கிறார். சென்னப்பட்டணா ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். இதை கை நழுவ விடாமல், தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார். இதனால், கூட்டணி வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டும் பா.ஜ.,வின் யோகேஸ்வருக்கு தலையாட்ட தயங்குகிறார்.
தொடர் தோல்வி
பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தாலும், தன் தொகுதியில் அக்கட்சியினரை வேட்பாளராக்குவதில், குமாரசாமிக்கு உடன்பாடு இல்லை என, தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தன் மகன் நிகிலை களமிறக்குவது குறித்து ஆலோசித்தார். ஆனால், நிகில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தவர். 2019ன் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியிலும், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றவர்.
சென்னப்பட்டணா தொகுதியில், காங்கிரஸ் வலுவான வேட்பாளரை களமிறக்கும். நானே வேட்பாளர் என, ஏற்கனவே சிவகுமார் கூறி வருகிறார். ஒருவேளை இவர் போட்டியிட்டால், நிகில் வெற்றி பெறுவது கஷ்டம். மூன்றாவது முறையும் நிகில் தோற்றால், அது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு பலத்த அடியாக இருக்கும். அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என, குமாரசாமி அஞ்சுகிறார்.
வேட்பாளரை முடிவு செய்யும் முன், தொகுதி மக்களின் நாடித்துடிப்பை தெரிந்து கொள்ள, அவர் திட்டமிட்டுள்ளார். நிகில் போட்டியிடுவதில், மக்கள் ஆர்வம் காட்டினால் அவரை களமிறக்கலாம். இல்லையென்றால் தன் மனைவி அனிதாவை களமிறக்க குமாரசாமி ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
பெண் வேட்பாளர்
அனிதா ஏற்கனவே தொகுதிக்கு, நன்கு அறிமுகமானவர். தொகுதியில் எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். அவர் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும். காங்கிரசுக்கு எதிராக பெண் வேட்பாளர் அஸ்திரத்தை பிரயோகித்ததாக இருக்கும் என்பது, குமாரசாமியின் திட்டமாகும்.
இது குறித்து, ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது என்றாலும், ஷிகாவி, சண்டூர் தொகுதிகளில் ம.ஜ.த.,வின் பங்களிப்பு ஏதும் இல்லை. ஆனால் நாளை (இன்று) நடக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு, அனைத்து தொகுதிகளின் ம.ஜ.த., தலைவர்களை அழைத்துள்ளோம்.
சென்னப்பட்டணா தொகுதிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை, மாநில பா.ஜ., தலைவர்கள் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இது நான் பிரதிநிதியாக இருந்த தொகுதி என்பதால், வேட்பாளரை தேர்வு செய்யும்படி கூறினர். அதற்காக, நான் அவசர முடிவை எடுக்க மாட்டேன்; ஒருமித்த கருத்துடன் முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.