UPDATED : ஆக 29, 2011 05:01 AM
ADDED : ஆக 28, 2011 11:13 PM

*ஐரோம் சானு சர்மிளா-(11ஆண்டு): 2000ல் நவ.,2 ல் மணிப்பூரில் இந்திய துணை ராணுவப் படையால் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி, சுமார் 11 ஆண்டுகளாக திட உணவு எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர், ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச்சாட்டில் கைதாவதும், பின் விடுதலை செய்யப்பட்டவுடன் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்வதும் வாடிக்கையாக உள்ளது. இவர் கைது செய்யப்படும்போதெல்லாம் வலுக்கட்டாயமாக 'டியூப்' வழியாக உணவு வழங்கப்படும்.
*சுவாமி நிகமானந்தர் - (115 நாட்கள்): சட்டத்திற்கு புறம்பாக கங்கை ஆற்றங்கரைகளில் நடக்கும் மணல்கொள்ளையை எதிர்த்து 2011, பிப்., 19 முதல் ஜூன் 13 வரை உண்ணாவிரதம் இருந்து, உயிரிழந்தார்.
*பொட்டி ஸ்ரீராமுலு - (82 நாட்கள்): 1952ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் அமைக்கக் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார். இவரது இறப்பைத் தொடர்ந்து எழுந்த வலுவான கோரிக்கைகளால்தான் மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, தனி மாநிலமாக உருவானது.
*ஜதீந்திரநாத் தாஸ் - (63 நாட்கள்): இந்திய சுதந்திரத்திற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். 1929, ஜூலை 13 முதல் செப்., 13 வரை லாகூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
*மகாத்மா காந்தி - தேச விடுதலை உட்பட பல காரணங்களுக்காக 17 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவற்றில் 1924 மற்றும் 1943 ம் ஆண்டுகளில் தலா 3 வாரங்கள் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
*மேதா பட்கர் - (21 நாட்கள்): சர்தார் சரோவர் அணை விவகாரத்தில், நர்மதா பச்சாவோ அந்தோலன் இயக்கத்தின் சார்பில் 1991ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தார்.
ஹசாரேவின் 13 நாட்கள்...ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹசாரே 13 நாட்கள் (சுமார் 288 மணி நேரம்) இருந்த உண்ணாவிரதம் வெற்றிகரமாக
முடிந்தது.
*ஆக. 16: உண்ணாவிரதம் இருக்க கிளம்பிய ஹசாரேவை அதிகாலையில் அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். சிறையிலேயே ஹசாரே தனது உண்ணாவிரதத்தை துவக்கினார்.
*ஆக.17 : போலீசார் உண்ணாவிரதத்தை ராம்லீலா மைதானத்தில் வைத்துக் கொள்ளலாம். ஏழு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும். அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தனர். இதை ஏற்க ஹசாரே தரப்பினர் மறுப்பு.
*ஆக. 18: உண்ணாவிரதம் இருக்க பிறப்பித்து இருந்த தடை உத்தரவை, போலீசார் வாபஸ் பெற்றனர். ராம்லீலா மைதானம் உண்ணாவிரதத்திற்கு தயாரானது.
*ஆக.19: சிறையிலிருந்து ஹசாரே
விடுதலை. ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் துவக்கம்.
*ஆக. 20: லோக்பால் மசோதா தொடர்பாக விட்டுக் கொடுக்கவும், ஆலோசனை நடத்தவும் தயார் என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.
*ஆக. 21: ஹசாரேவிற்கு ஆதரவாக டில்லியில் பேரணி, பிரதமர் வீட்டின் முன் ஏராளமானோர் போராட்டம்.
*ஆக. 22: அரசு பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், மன்மோகன் சிங் அல்லது ராகுல் வரவேண்டும் என அன்னா ஹசாரே குழு நிபந்தனை.
*ஆக. 23: ஜன்லோக்பால் மசோதாவை உரிய நடைமுறைப்படி, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க தயார் என பிரதமர் மன்மோகன் ஒப்புதல்.
*ஆக. 24: நான்கு நாட்களுக்குள் லோக்பால் மசோதா வேண்டும் என ஹசாரே மத்திய அரசிற்கு நிபந்தனை.
*ஆக. 25: பார்லிமென்டில் நடந்த விவாதத்தின் போது பிரதமர் மன்மோகன், சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். மசோதா தொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுவது குறித்த பார்லி.,யில் விவாதிக்க வேண்டும். அரசு ஊழியர்களை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என மூன்று நிபந்தனைகளை ஹசாரே முன் வைத்தார்.
*ஆக. 27: ஹசாரே நிபந்தனையை ஏற்று பார்லி.,யில் விவாதம் நடந்து, தீர்மானம் நிறைவேறியது.
*ஆக. 28: தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து நேற்று காலை 10.20 மணிக்கு இளநீர் குடித்து 288 மணி நேர உண்ணாவிரதத்தை ஹசாரே முடித்தார்.
அன்னாவின் அஸ்திரம்:இளம் வயதில் ராணுவத்தில் டிரைவராக பணியாற்றினார், அன்னா ஹசாரே. பின்னர், சமூக ஆர்வலராக புதிய அவதாரம் எடுத்தார். காந்தியின் அகிம்சை வழியில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டார். ஊழல் ஒழிப்பு, விவசாயிகளின் பிரச்னைகளுக்காக இதுவரை 15 முறை (113 நாட்கள்) உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதில் இவரது முக்கிய உண்ணாவிரத போராட்டங்கள்...
*ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1997 நவ., 20 முதல் டிச. 1 வரை மொத்தம் 12 நாட்கள் தினமும் ஒரு 'கிளாஸ் ஜூஸ்' மட்டும் குடித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
*1998ல், மகாராஷ்டிராவின் சமூக நலத்துறை அமைச்சர் பாபன் குலாப்பாலால் அவதூறு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின், விடுதலையானார். இந்த கைது விவகாரம் பெரும் போராட்டத்திற்கு வழி வகுத்தது. இறுதியில், 1999ல் அமைச்சர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
*2003ல், மகாராஷ்டிரா தகவல் பெறும் உரிமை சட்டத்தை(2002) சட்டமாக்க கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆகஸ்ட் 9 முதல் 20ம் தேதி வரை 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
*தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளையும் சேர்க்க கோரி, ஜந்தர் மந்தரில் 2006ல், ஆக., 9 முதல் 19 வரை, மொத்தம் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
*2011ல் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆக., 16 முதல் 28 வரை 13 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மிக நீ...ண்ட உண்ணாவிரதங்கள் : உலகில் அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர்கள்...:*டென்னஸ் கேலர் குட்வின் - (385 நாட்கள்): இங்கிலாந்தை சேர்ந்த இவர், 1973ல் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரை மறுத்து 385 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு வலுக்கட்டாயமாக 'டியூப்' மூலம் உணவு செலுத்தப்பட்டது. இவரது நீண்டநாள் உண்ணாவிரதம் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.
*பர்ரீ ஹோர்ன் - (68 நாட்கள்): இங்கிலாந்தை சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலரான இவர் சிக்கலான அறிவியல் சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தக்கூடாது எனக்கோரி, 1998 ல் அக்., 6 முதல் டிச., 13 வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
*பாபி சாண்ட்ஸ் - (66 நாட்கள்): அயர்லாந்து துணை ராணுவப்படையை சேர்ந்த வீரரான இவர், 1981, மார்ச் 1 முதல் மே 5 வரை, லிஸ்பனில் உள்ள சிறையில் பிரிட்டன் அரசுக்கு எதிராக பிறகைதிகளுடன் சேர்ந்து உண்ணாவிரதமிருந்து, இறந்தார்.
*பெட்ரோ லுஸ் போய்டெல் - (53 நாட்கள்): கியூபா நாட்டுக் கவிஞர். பாடிஸ்டா மற்றும் அதன்பின் வந்த காஸ்ட்ரோவின் அரசுகளை எதிர்த்த இவர், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த இவர், 1972, ஏப்., 3 முதல் மே 25 வரை உண்ணாவிரதமிருந்து, உடல் நலமின்றி இறந்தார்.-நமது டில்லி நிருபர்-