'அன்னபாக்யா' திட்டத்துக்கு அரிசி கிடைக்காமல் அரசு திண்டாட்டம்! ரொக்கம் வழங்குவதை தொடர உணவு துறை திட்டம்
'அன்னபாக்யா' திட்டத்துக்கு அரிசி கிடைக்காமல் அரசு திண்டாட்டம்! ரொக்கம் வழங்குவதை தொடர உணவு துறை திட்டம்
ADDED : ஜன 03, 2024 11:22 PM
பெங்களூரு : 'அன்னபாக்யா' திட்டத்தில், 10 கிலோ அரிசி வழங்க முடியாமல் கர்நாடக அரசு திண்டாடுகிறது. வெளி மாநிலங்களில் அரிசி வாங்கும் முயற்சிக்கு, இன்னும் பலன் கிடைக்கவில்லை. எனவே வரும் நாட்களில், 5 கிலோ அரிசிக்குப் பதிலாக பணமாகவே செலுத்த முடிவு செய்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி 'அன்னபாக்யா' உட்பட, ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்தது. தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன்பின் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தியது.
அன்னபாக்யா திட்டத்தையும் செயல்படுத்தியது. ஆனால் வாக்குறுதியில் கூறியது போன்று, பி.பி.எல்., ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசியை வழங்க முதல்வர் சித்தராமையா அரசால் முடியவில்லை. ஏனென்றால் அரிசி பற்றாக்குறை உள்ளது. ஹரியானா, சத்தீஸ்கர் உட்பட, பல மாநிலங்களில் அரிசி வாங்க முயற்சித்தது. ஆனால் அங்கும் அரிசி உற்பத்தி குறைந்ததால், அரிசி கிடைக்கவில்லை.
எனவே 5 கிலோ அரிசியும், 5 கிலோ அரிசிக்கான பணத்தையும் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. இதை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். பயனாளிகளும் அரிசிக்கான தொகையை அதிகரிக்க வேண்டும் அல்லது பணத்துக்கு பதிலாக அரிசியாகவே வினியோகிக்கும்படி, நெருக்கடி கொடுக்கின்றனர்.
கொடுத்த வாக்குறுதிப்படி அரிசி வழங்கி, வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, முதல்வர் சித்தராமையா விரும்புகிறார். வெளி மாநிலங்களில் அரிசி வாங்க, தொடர்ந்து பேச்சு நடக்கிறது. அரிசி வினியோகிக்க, தற்போதைக்கு எந்த மாநிலமும் முன் வரவில்லை. இதனால் அரிசி வழங்குவதில், பின்னடைவு ஏற்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக, உணவு, பொது வினியோகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அன்னபாக்யா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு முழுமையான அளவில், அரிசி வழங்க வேண்டும் என்பது, மாநில அரசின் எண்ணம். இதற்காக அரிசி சேகரிக்க, ஏழு மாதங்களாக அரசு முயற்சிக்கிறது. திட்டத்துக்கு அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சொன்னபடி நடந்து கொள்ள முடியவில்லை. அரிசி பற்றாக்குறையே இதற்கு காரணம். பல மாநிலங்களில், அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. சத்தீஸ்கரில், 51.6 லட்சம் டன்னில் இருந்து, 38.5 லட்சம் டன்னாகவும், தெலுங்கானாவில், 37 லட்சம் டன்னில் இருந்து, 27 டன்னாகவும் குறைந்துள்ளது.
இதே போன்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. எனவே அன்னபாக்யா திட்டத்துக்கு, அரிசி வாங்க முடியவில்லை. சர்வதேச மார்க்கெட்டில், அரிசி விலை அதிகரித்துள்ளது.
கர்நாடக அரசு நிர்ணயித்த விலைக்கு, அரிசி வினியோகிக்க வெளி மாநிலங்கள் முன் வரவில்லை. அரிசி பற்றாக்குறையால், வரும் நாட்களில் பணமாகவே வழங்கப்படும். பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதில், எந்த பிரச்னையும் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில அரசால் முடியாது. ஆனால் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததாக பொய் சொல்கின்றனர். அரசின் மோசடி, மக்களுக்கு விரைவில் தெரியும்.
- ஆர்.அசோக், பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர்
காங்கிரஸ் அரசால், எந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. லோக்சபா தேர்தலில் இந்த கட்சியின் வாக்குறுதி திட்டங்கள் வேலை செய்யாது. திட்டங்கள் ஓட்டுகளை கொண்டு வரும் என்ற பிரம்மையில் உள்ளனர்.
- எச்.டி.குமாரசாமி, மாநில தலைவர், ம.ஜ.த.,