1957ல் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நடைமுறை பெங்களூரு கருத்தரங்கில் அண்ணாமலை பேச்சு
1957ல் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நடைமுறை பெங்களூரு கருத்தரங்கில் அண்ணாமலை பேச்சு
ADDED : ஜூலை 12, 2025 05:34 AM

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., சார்பில் பெங்களூரு மத்திகெரேயில் உள்ள, இந்திய அறிவியல் கழக அரங்கில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சாத்தியம் குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, நாடு முழுதும் கருத்துகளை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்தது.
ஒரு அரசு, பாதியில் அதிகாரத்தை இழந்தால் என்ன செய்வது என்பது குறித்தும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1980 முதல் 1990 இடைப்பட்ட காலத்தில், பல அரசுகள் வீழ்ந்தன. ஆனால் 2000ம் ஆண்டுக்கு பின், அரசுகள் வீழ்ச்சி குறைந்து வருகிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப, லோக்சபாவில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை தற்போது 543 ஆக உள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெங்களூரில் தற்போது எம்.பி.,க்கள் எண்ணிக்கை மூன்று.
44 சதவீதம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் சில கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. தோல்வி அடைந்த கட்சிகள் குறை சொல்வது வழக்கம்.
கர்நாடகாவில் 44 சதவீதமும், தமிழகத்தில் 50 சதவீதம் பேரும் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள். தமிழகத்தில் 15 சதவீத எம்.பி.,க்கள் நகர்ப்புறங்களில் இருந்தும், மீதம் 85 சதவீதம் பேர் கிராமப்புற பகுதிகளில் இருந்தும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்படும்போது, நகர்ப்புறங்களில் இருந்து அதிக எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கபடுவர்.
கட்சிகள் ஆதரவு
கடந்த 1983ம் ஆண்டே, தேர்தல் ஆணையம், ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்று கூறியது. 2015ம் ஆண்டில் பார்லிமென்ட் குறைதீர் குழுவும் இதை முன்மொழிந்தது. 2018ல் சட்ட ஆணையமும் வலியுறுத்தியது. 2019ம் ஆண்டு ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டங்களை, தேர்தல் ஆணையம் கூட்டியது.
இதில் 19 கட்சிகள் பங்கேற்றன. பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், ஜே.டி.யு., உள்ளிட்ட 16 கட்சிகள் ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு ஆதரவாக உள்ளன.
கடந்த 1957ம் ஆண்டு ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை இருந்தது. 1962ம் ஆண்டில் ஒரே நேரத்தில் சட்டசபை, லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தது. 1967 வரை இந்த நடைமுறை இருந்தது. 1969ம் ஆண்டு காங்கிரசில் உட்கட்சி போராட்டம் நடந்தது. 1970ல் இந்திரா லோக்சபாவை கலைத்தார். இது தேர்தல் நடைமுறையில் சீர்குலைவுக்கு வழிவகுத்தது.
கடந்த 1968ம் ஆண்டில், நாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சியில் இருந்தன. அப்போது தமிழகத்தில் காங்கிரசுக்கு பதிலாக தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 1972ம் ஆண்டு காலகட்டத்தில் பல மாநிலங்களின் சட்டசபை கலைக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சி
நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமலானது. தற்போது ஓட்டு விகிதம் குறைந்து வருகிறது. இளைஞர்களிடம் ஓட்டளிக்க ஆர்வம் இல்லை.
ஆனாலும் 2024 லோக்சபா தேர்தலில் 90 கோடி மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். ஆந்திராவில் அதிகபட்சம் 81 சதவீத ஓட்டுப் பதிவானது. இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.