நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; அன்னபூர்ணா சர்ச்சையில் வானதி சொல்வது இதுதான்!
நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; அன்னபூர்ணா சர்ச்சையில் வானதி சொல்வது இதுதான்!
UPDATED : செப் 13, 2024 01:30 PM
ADDED : செப் 13, 2024 01:23 PM

கோவை; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேரம் கேட்டதே ஹோட்டல் உரிமையாளர் தான் என்று பா.ஜ. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி
கோவை கொடிசியாவில் தொழில்முனைவோர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பிரச்னைகளை பன், ஜாம், க்ரீம் என்று பிரபல ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் பேசினார். அவரின் பேச்சு ஒரு பக்கம் வைரலான நிலையில், சீனிவாசன் ஜனரஞ்சமாக பேசியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
வீடியோ
கலந்துரையாடல் கூட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வும், அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே சமயத்தில் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தமது பேச்சுக்கு மன்னிப்பும் கோரினார்.
பேட்டி
இந் நிலையில், கோவையில் பா.ஜ. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;
கருத்து
ஜி.எஸ்.டி.,யில் என்ன குறை என்று கேட்பதற்காவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். ஒரு நல்ல எண்ணத்தில் எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரிடம் ஹோட்டல் உரிமையாளர் தமது கருத்தை சொல்கிறார்.
ஜிலேபி
அந்த நிகழ்ச்சியில், அவர் பேசும் போது நான் ஹோட்டலுக்கு வந்து காப்பி சாப்பிடுவேன், ஜிலேபி சாப்பிடுவேன், அப்புறம் சண்டையும் போடுவேன் என்று கூறினார். அதை கேட்ட எனக்கு அங்கேயே நான் எத்தனை முறை ஹோட்டலுக்கு வந்திருக்கேன் என்று பதில் தந்திருக்க முடியும், நான் ஜிலேபி சாப்பிட்டிருக்கேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் நான் ஒரு முறை கூட அந்த ஹோட்டலுக்குச் சென்று ஜிலேபி சாப்பிட்டது இல்லை. நான் அங்கு உடனடியாக பதில் அளித்திருக்க முடியும், ஆனால் நான் விரும்பவில்லை.
நேரம் கேட்டார்
மறுநாள் காலை 7 மணியில் இருந்து ஹோட்டல் உரிமையாளர் தொடர்ந்து என்னிடம் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார். தான் பேசியது தவறு, மன்னிப்பு கேட்கிறேன், இப்போது வருகிறேன், அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க நேரம் ஒதுக்கித் தரவேண்டும் என்று கேட்டார். பிசியாக நிகழ்ச்சிகளில் இருந்ததால் மதியம் பார்க்கலாம் என்று கூற அவரும் அதேபோன்று மதியம் 2.30 மணிக்கு ஹோட்டலுக்கு வருகிறார்.
மன்னிப்பு
நான் பேசின விஷயம் தவறுதான், தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன். சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக வைரலாகி விட்டது. தவறாக போன ஒரு விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றார் அதன் பின்னர் அமைச்சரும் பேசினார். பின்னர் ஹோட்டல் உரிமையாளர் என்னிடமும், நீங்கள் ஒரு சகோதரி மாதிரிதான் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
வருத்தம்
ஆனால் இந்த வீடியோவை ஒரு சில கட்சியினர் தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்டு விட்டனர். பொதுமேடையில் எங்கள் எம்.எல்,ஏ.,வை பற்றி பேசியதால் எங்கள் கட்சிக்காரர்களுக்கும் அந்த வருத்தம் உள்ளது.
அரசியல் சாயம்
பெண் அரசியல்வாதிகளை கேலியாக பேசுவது நிறுத்தப்பட வேண்டும். ஹோட்டல் உரிமையாளர் பேசியது தவறு என்பதை உணர்ந்து அவராகவே முன்வந்து நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கூறினார். இதற்கு தி.மு.க., காங்., உள்ளிட்ட கட்சிகள் அரசியல் சாயம் பூசி பெரிதுபடுத்துகின்றன.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.