ADDED : டிச 03, 2024 07:43 AM

'கோவில் இல்லாத ஊரில் குடியேற வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று முன்னோர்கள் கூறுவர். இதனால், மக்கள் கோவில்கள் இருக்கும் ஊரில் குடியேற விரும்புவர்.
இந்நிலையில், கர்நாடகாவின் வட மாவட்டமான தார்வாடின் அன்னிகேரி ஆன்மிக நகரமாக விளங்குகிறது. இந்த ஊர் கன்னட கவிஞரான ஆதி கவி பம்பா பிறந்த இடம் ஆகும். இங்குள்ள அம்ருதேஸ்வரா கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இது தவிர, அங்கு பனசங்கரி அம்மன், பசப்பா, கஜினபசப்பா, ஹனுமன் கோவில்களும் உள்ளன. அன்னிகேரி ரயில் நிலையத்தின் அருகே பழமையான லிங்காயத் சமூக கோவிலும் உள்ளது. இது தவிர மேலும் இரண்டு லிங்காயத் மடங்களும், ஏழு மசூதிகளும் உள்ளன.
அம்ருதேஸ்வரா கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கல்யாணி சாளுக்கியர் பாணியில் உள்ளது. கோவிலில் 76 துாண்கள் மற்றும், அதன் சுவர்களில் புராதன உருவங்கள் செதுக்கப்பட்ட கூரை உள்ளது. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. அடுத்த மாதம் இந்த கோவிலில் ஆண்டு திருவிழா நடக்க உள்ளது.
இந்த கோவிலின் நடை தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து அன்னிகேரி 436 கி.மீ.,யில் உள்ளது. ஹூப்பள்ளியில் இருந்து 44 கி.மீ., கதக்கில் இருந்து 24 கி.மீ.,யில் அமைந்துள்ளது.
மெஜஸ்டிக்கில் இருந்து அன்னிகேரிக்கு நேரடி அரசு பஸ்சும் உள்ளது. அன்னிகேரி சென்று வந்தவர்கள் சிறந்த ஆன்மிக தலம் என்று தங்கள் அனுபவத்தை பகிர்ந்து உள்ளனர். -- நமது நிருபர் --