விவசாயிகள் கடனுக்கான வட்டி ரத்து 57,000 பேர் பயன் பெறுவதாக அறிவிப்பு
விவசாயிகள் கடனுக்கான வட்டி ரத்து 57,000 பேர் பயன் பெறுவதாக அறிவிப்பு
ADDED : பிப் 17, 2024 04:46 AM
பெங்களூரு : மாவட்ட கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற குறுகிய, நீண்ட கால கடனுக்கான வட்டி ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 57,000 விவசாயிகள் பயனடைவர். மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 496 கோடி ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
l கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் உயிர்நாடியான கூட்டுறவு துறையை பலப்படுத்துவது அரசின் நோக்கம். 2023 - 24ல் வட்டியில்லா குறுகிய கால கடன், மூன்று லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. மூன்று சதவீத வட்டியில் வழங்கப்படும், நடுத்தர, நீண்ட கால கடன் 10 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. நடப்பாண்டு 36 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, 27,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்
l முந்தைய அரசு காலத்தில், 50,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது. 21 லட்சம் விவசாயிகளின் 7,631 கோடி ரூபாய் கடன் ரத்தானது. இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 132 கோடி ரூபாய் பாக்கியிருந்தது. இதனால் வங்கிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. எனவே நடப்பாண்டு 132 கோடி ரூபாய் வழங்கப்படும்
l மாவட்ட கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற குறுகிய, நீண்ட கால கடனுக்கான வட்டி ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 57,000 விவசாயிகள் பயனடைவர். மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 496 கோடி ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
வேண்டுகோள்
l கர்நாடக விவசாய விலை ஆணையம், தன் அறிக்கையில், 26 விளைச்சல்கள் முக்கியமானவை என, அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் 16 விளைச்சல்களுக்கு மட்டும், மத்திய அரசு ஆதார விலை அறிவித்துள்ளது. எனவே கர்நாடகாவின் பாக்கு, வெங்காயம், திராட்சை, மாம்பழம், வாழை உட்பட, மற்ற முக்கிய விளைச்சல்களுக்கும் ஆதார விலை அறிவிக்கும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்
l விவசாய வல்லுனர் சுவாமிநாதனுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கியது மகிழ்ச்சியான விஷயம். அவரது தலைமையிலான கமிட்டி அறிக்கையின் சிபாரிசுபடி, விவசாயத்துக்கு செய்யும் செலவு, லாபத்தை கருத்தில் கொண்டு, ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்
l அபெக்ஸ் கூட்டுறவு வங்கி உட்பட எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க, சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்
l விவசாய உற்பத்தி பாதுகாப்பு, மார்க்கெட் தொடர்பில், விலை நிர்ணயிப்பதில் கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை பலப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குளிர்பதன மையங்கள்
l எலபுர்கா, பசவனபாகேவாடி, ராணி பென்னுார், பல்லாரி, கதக் விவசாய உற்பத்தி மார்க்கெட் கமிட்டிகளில், 50 கோடி ரூபாய் செலவிலும், ராய்ச்சூர், மைசூரில் 40 கோடி ரூபாய் செலவிலும், குளிர்ப்பதன மையங்கள் கட்டப்படும்
l ராய்ச்சூரில் 25 கோடி ரூபாய் செலவில், உலர்ந்த மிளகாய் மார்க்கெட் கட்டப்படும். ராணி பென்னுாரில் 112 கோடி ரூபாய் செலவில், 222 ஏக்கர் பரப்பளவில் உலர்ந்த மிளகாய் மெகா மார்க்கெட் துவக்கப்படும்
l மங்களூரின், நெல்லிகாயி சாலையில் உள்ள மார்க்கெட்டில், 35 கோடி ரூபாய் செலவில் அதிநவீன விவசாய உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்
l விவசாய உற்பத்தி மார்க்கெட் கமிட்டிகளின் பணிகள், 10 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் மயமாக்கப்படும்
l பெங்களூரின் தாசனபுரா, மைசூரு, ஹூப்பள்ளி, பல்லாரி, கோலார், சிக்கபல்லாபூர், பெலகாவி மார்க்கெட்டுகளில் தனியார், அரசு ஒருங்கிணைப்பில், கழிவுகள் இல்லாத காய்கறிகளாக மாற்றப்படும்
l ஏ.பி.எம்.சி.,களில் மின்சார வாகனங்களின் சார்ஜிங் மையங்கள், பெட்ரோல் பங்க்கள் அமைக்கப்படும்
l ஏ.பி.எம்.சி.,க்களை பலப்படுத்தி, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்யப்படும்
l விவசாயிகளுக்கு எதிரான, ஏ.பி.எம்.சி., திருத்த சட்டத்தை திரும்ப பெறும் மசோதா, சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்டது. சட்டமேலவையில் சபை கமிட்டி ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கும் மசோதாவுக்கு அங்கீகாரம் பெற முயற்சிப்போம்
l பொருளாதார வலுவில்லாத மார்க்கெட் கமிட்டிகளுக்கு, நிதியுதவி வழங்கும் நோக்கில், பண வசதி உள்ள மார்க்கெட் கமிட்டிகளிடம் நிதியுதவி பெற்றுத்தரப்படும். இதற்காக மார்க்கெட் வளர்ச்சி உதவி நிதி அமைக்க, சட்டம் வகுக்கப்படும்
l மாநிலத்தில் கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, எடையில் மோசடி நடப்பதை தடுக்கவும், ஏ.பி.எம்.சி., மூலம் அனைத்து சர்க்கரை ஆலைகளின் அருகில், எடை இயந்திரம் பொருத்தப்படும்
l கர்நாடக கிட்டங்கிகள் கார்ப்பரேஷன் நிதிச்சுமையில் தவிக்கிறது. காங்கிரஸ் அரசு வந்த பின், 4.54 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட, 76 கிட்டங்கிகள் கட்ட 376 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், பயன்படுத்தப்படாத கிட்டங்கிகளில், குளிர்பதன மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.