தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
ADDED : ஜன 09, 2025 06:41 AM

பெங்களூரு: நேற்று நடப்பதாக இருந்த எஸ்.சி., - எஸ்.டி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கூட்டம் நடப்பதாகவும், இதற்கு கட்சித் தலைமை அனுமதி அளித்துள்ளதாகவும், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்திருந்தார். திடீரென இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:
சித்ரதுர்காவில் நடந்த எஸ்.சி., - எஸ்.டி., மாநாட்டில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்விஷயம், கட்சித் தலைமைக்கு தெரியவில்லை. தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துவது தொடர்பாக மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த மாநில பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, தானும் இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன், 'இன்றைய (நேற்று) தினம் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், வர இயலவில்லை' என்றார். எனவே தான் இந்த கூட்டம் ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தும்போது, டின்னர் வைப்பது சகஜம். இக்கூட்டம் நடத்தவது அவர்களுக்கு பிடித்துள்ளதா, இல்லையா என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை என்று யாரும் கூறவில்லை. ஒத்திவைத்துள்ளோம், அவ்வளவு தான்.
இக்கூட்டம் தொடர்பாக, கட்சி மேலிடத்தில் துணை முதல்வர் சிவகுமார் புகார் அளித்தாரா என்று தெரியவில்லை. அவரையும் எங்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பது தொடர்பாக விவாதித்தோம். அரசியல் செய்ய வேண்டுமென்றால், நேரடியாக, பகிரங்கமாக செய்வோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.
தலித் சமுதாயத்தினர் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். மீண்டும் ஆலோசனை கூட்டம் தொடர்பாக தேதி நிர்ணயித்த பின், உங்களுக்கு தெரிவிக்கப்படும். என்ன நடந்தது என்று அனைத்தையும் கூற இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.