ADDED : டிச 14, 2024 12:56 AM
மும்பை: மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு மர்மநபர் 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இ - மெயிலுக்கு வந்த இந்த மிரட்டல் கடிதம் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து வந்து ரிசர்வ் வங்கி முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாதா ராம்பாய் மார்க் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மர்மநபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற சில நாட்களில் இந்த மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மும்பை போலீஸ் துணை கமிஷனர் கூறியதாவது:
வங்கியின் அதிகாரப்பூர்வ இ - மெயிலுக்கு வந்துள்ள இந்த மிரட்டல் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதில் வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
உண்மையான இ - மெயில் ஐ.டி., மட்டுமின்றி எந்த இடத்தில் இருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த மாதத்தில் மட்டும் ரிசர்வ் வங்கிக்கு, இதுவரை இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் நேற்று ஒரே நாளில் டில்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.