பீஹாரில் இது சகஜம் போல: 15 நாளில் 7வது பாலம் ‛‛பணால்''
பீஹாரில் இது சகஜம் போல: 15 நாளில் 7வது பாலம் ‛‛பணால்''
ADDED : ஜூலை 03, 2024 02:49 PM

பாட்னா: பீஹாரில் இன்று (ஜூலை 03) மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இங்கு கடந்த 15 நாட்களில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவான் மாவட்டத்தில் உள்ள கண்காய் ஆற்றில் இன்று பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. சமீபகாலமாக அங்கு கனமழை பெய்வதால், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாலத்தின் கட்டுமான சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் இடிந்து விழுந்தது.
கடந்த 15 நாட்களில் பீஹார் மாநிலத்தில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளன. தொடர் கனமழையால், கிசான்கஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர் கஞ்ச் பகுதியில் பண்ட் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
அதற்கு முன் கிழக்கு சம்கரன், அராரியா, சிவான், கிஷன்கஞ்ச், மதுபானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இதன் காரணமாக, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.