பீஹாரில் மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி வரிசைக்கு தாவல்
பீஹாரில் மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி வரிசைக்கு தாவல்
ADDED : மார் 01, 2024 11:27 PM

பாட்னா: பீஹாரில் சட்டசபை நிகழ்வின்போது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்தது, எதிர்க்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி ஆட்சி
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுடன், 'மஹாகட்பந்தன்' கூட்டணியை முறித்துவிட்டு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைத்தது.
இதையடுத்து, சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த மவுரி கவுதம், சித்தார்த் சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த சங்கீதா குமாரி ஆகிய மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சியின் வரிசைக்கு சென்றனர்.
பெரும் அதிர்ச்சி
அங்கு, பா.ஜ., மாநில தலைவரும், துணை முதல்வராகவும் உள்ள சாம்ராட் சவுத்ரியின் பின்புறம் சென்று அவர்கள் அமர்ந்தனர். இது, எதிர்க்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.,வான பாரத் பிந்த், ஆளுங்கட்சியினர் அமர்ந்துள்ள வரிசைக்கு சென்று அமர்ந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இது, எதிர்க்கட்சியினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

