ஜெகன்மோகன் கட்சியிலிருந்து மேலும் ஒரு எம்.பி., ராஜினாமா
ஜெகன்மோகன் கட்சியிலிருந்து மேலும் ஒரு எம்.பி., ராஜினாமா
ADDED : ஜன 24, 2024 11:10 PM

அமராவதி:ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏற்கனவே இரண்டு எம்.பி.,க்கள் ராஜினாமா செய்த நிலையில், மூன்றாவதாக ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு நேற்று முன் தினம் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடு ஆகிய பணிகள் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் நரசாராவ்பேட்டை லோக்சபா எம்.பி., ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, திடீர் என நேற்று முன் தினம், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது பற்றி கிருஷ்ண தேவராயலு கூறியதாவது:
கட்சிப் பதவியையும், எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தது உண்மை தான்.
நான் வெற்றி பெற்ற நரசாராவ்பேட்டை லோக்சபா தொகுதியை வேறு ஒருவருக்கு ஒதுக்கப் போவதாக பேச்சு அடிபட்டு வந்தது. அது உண்மை என 15 நாட்களுக்கு முன் எனக்கு தெரிய வந்தது.
என்னை வேறொரு மூலைக்கு துாக்கி அடிக்க முயற்சிக்கின்றனர். இதன் காரணமாக கட்சி மற்றும் எம்.பி., பதவியில் இருந்து விலகினேன்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எந்த கட்சியும் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மச்சிலிப்பட்டினம் லோக்சபா எம்.பி., பாலசோரி வல்லபாநேனி, கர்னுால் தொகுதி லோக்சபா எம்.பி., சஞ்சீவ் குமார் ஆகியோர், வரும் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்காது என தெரிந்து ராஜினாமா செய்தனர்.