ரூ.200 கோடி மோசடிக்கு உதவி குஜராத்தில் மேலும் ஒருவர் கைது
ரூ.200 கோடி மோசடிக்கு உதவி குஜராத்தில் மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 09, 2025 11:09 PM
சூரத்: துபாயில் செயல்படும் சைபர் குற்றவாளிகள் 200 கோடி ரூபாயை மோசடி செய்ய உதவியதாக குஜராத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரை மையமாக கொண்டு, சைபர் மோசடி கும்பல் ஒன்று செயல்படுகிறது. இந்த கும்பல் மோசடி செய்வ தன் மூலம் கிடைக்கும் பணத்தை, சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்துவர். இதற்காக, அந்த வங்கிக் கணக்கு வைத்துள்ளவருக்கு கமி ஷன் வழங்கப்படும்.
இதற்காக போலி கணக்குகளை துவக்குவது, சிலருடைய வங்கிக்கணக்கு தகவல்களைத் திருடி அதில் மோசடி பணத்தை போடுவது, தற்போது ஒரு தொழிலாக நடந்து வருகிறது.
இவ்வாறு சைபர் மோசடி கும்பலுக்கு உதவும் வகையில், வங்கிக்கணக்கு மோசடியில் ஈடுபட்டதாக, குஜராத்தின் மோர்பி, சுரேந்திர நகர், சூரத், அம்ரேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேரை சி.ஐ.டி., போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த கும்பல், 100 போலி வங்கி கணக்குகளை பயன்படுத்தி, துபாயைச் சேர்ந்த மோசடி கும்பலுக்கு, 200 கோடி ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய சேட்டன் கங்கானி என்பவரை, சி.ஐ.டி.,போலீசார் சூரத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மோசடி மூலம் கிடைக்கும் பணத்தில், 10 கோடி ரூபாயை, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள, 'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனை கணக்கிற்கு அனுப்ப இவர் உதவியது தெரியவந்துள்ளது. இதற்காக, இவருக்கு தனியாக கமிஷன் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சேட்டன் கங்கானியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

