ஹரியானாவில் மேலும் ஒரு போலீஸ் தற்கொலை ஐ.பி.எஸ்., அதிகாரி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
ஹரியானாவில் மேலும் ஒரு போலீஸ் தற்கொலை ஐ.பி.எஸ்., அதிகாரி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
ADDED : அக் 15, 2025 03:09 AM

சண்டிகர் : ஹரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 'அவர் ஊழல் செய்தவர் என்றும், உண்மை வெளிப்பட்டு விடும் என்ற பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்' என்றும் கடிதம் எழுதிவிட்டு, மற்றொரு அதிகாரி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஹரியானாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூரண் குமார். இவர் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்தபோது, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அம்மாநில போலீஸ் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பூரண்குமார் சட்டை பையில் கிடைத்த ஒன்பது பக்க கடிதத்தில், 'தற்கொலைக்கு, 13 உயரதிகாரிகளே காரணம்' என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 'ஜாதி ரீதியிலான பாகுபாடு, பணி ரீதியாக தனிமைப்படுத்துவது, பதவி உயர்வை தடுப்பது என, எனக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
'பொறுமையாக இருந்தும் எந்த பலனும் இல்லை. எனவே, வேறு வழி தெரியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தேன்' என, குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, பூரண்குமாரின் மனைவியும், ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அம்நீத், தன் கணவரின் தற்கொலைக்கு டி.ஜி.பி., ஷத்ருஜீத் சிங்கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்.பி., நரேந்திர பைஜர்னியா தான் காரணம் என குற்றஞ்சாட்டி முறைப்படி புகார் அளித்தார்.
இதையடுத்து 13 அதிகாரிகளுக்கு எதிராக எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ரோஹ்தக் எஸ்.பி., நரேந்திர பைஜர்னியா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சுரேந்திர சிங் போரியா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரோஹ்தக், 'சைபர் செல்' பிரிவில் உதவி எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த சந்தீப் குமார் என்பவரும் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
அவரது சடலம் அருகே கிடந்த கடிதத்தையும், உயிரிழப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோவையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தற்கொலை செய்து கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி பூரண்குமார் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
சந்தீப் குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
பூரண்குமார் ஊழல் அதிகாரி. அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ என பயந்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
பூரண்குமார் தற்கொலை வழக்கில் என்னையும் கைது செய்வர் என்ற பயத்தில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உயிரிழப்பதற்கு முன்பாக ஊழல் குறித்த தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.
பாகுபாடு இல்லாமல் இந்த வழக்கை நடத்த வேண்டும் என்பதற்காகவே என் உயிரையும் தியாகம் செய்ய முன் வந்தேன். ஊழல் குடும்பத்தை தண்டித்தே ஆக வேண்டும். பூரண் குமார் ஜாதிய போர்வையில் தன் தவறுகளை மறைக்க பார்க்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.