பீஹாரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்; தொழிலதிபர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை
பீஹாரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்; தொழிலதிபர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை
ADDED : ஜூலை 10, 2025 07:49 PM

பாட்னா: கோபால் கெம்கா கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பீஹாரில் மற்றொரு தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பீஹாரில், கடந்த ஜூலை 6ம் தேதி, தலைநகர் பாட்னாவில் காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 'ட்வின் டவர்' பகுதியில், பிரபல தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான கோபால் கெம்கா, வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கோபால் கெம்கா கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பீஹாரில் இன்று( ஜூலை 10) மற்றொரு தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாட்னாவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணிதலாப் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட தானா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இறந்தவர் ராமகாந்த் யாதவ், மணல் வியாபாரி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.