அமலாக்க துறையினர் மீது மீண்டும் தாக்குதல்: மேலும் ஒரு திரிணமுல் காங்., நிர்வாகி கைது
அமலாக்க துறையினர் மீது மீண்டும் தாக்குதல்: மேலும் ஒரு திரிணமுல் காங்., நிர்வாகி கைது
UPDATED : ஜன 07, 2024 01:06 AM
ADDED : ஜன 07, 2024 01:05 AM

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் நடந்த ரேஷன் முறைகேடு தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பிரமுகரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போங்கான் என்ற பகுதியைச் சேர்ந்தவர், சங்கர் ஆதியா.
ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த இவர், போங்கான் நகராட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ரேஷன் முறைகேடு தொடர்பாக, சங்கர் ஆதியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், நேற்று முன்தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளில், 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 17 மணி நேர சோதனைக்கு பின், நேற்று காலை, சங்கர் ஆதியாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக, கடந்த ஆண்டு மாநில அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெருக்கமான சங்கர் ஆதியா கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கர் ஆதியா கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த திரிணமுல் காங்., தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
மேலும் அவர்களது வாகனங்கள் மீது கற் களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, திரிணமுல் காங்., தொண்டர்கள் மீது தடியடி நடத்தி, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கூட்டத்தை கலைத்தனர்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், சோதனைக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது, நேற்று முன்தினம் திரிணமுல் காங்., தொண்டர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதே போன்றதொரு சம்பவம் போங்கானில் அரங்கேறி உள்ளது.