ADDED : ஜன 10, 2025 07:13 AM

துமகூரு: பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மதுகிரி முன்னாள் டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் அளித்து உள்ளார்.
துமகூரு, மதுகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா, 58, தன்னிடம் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், தவறாக நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ பரவியதை அடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அவர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராமச்சந்திரப்பா தற்போது, சிறையில் உள்ளார். தற்போது, அவர் மீது மற்றொரு பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
துமகூரு, கொரட்டகெரேவை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், தனக்கு மனை வாங்குவதற்கு ஒரு நபரிடம் பணம் கொடுத்து உள்ளார். அந்நபரோ, மனையை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதனால், பணத்தை திருப்பி தருமாறு அப்பெண் கேட்டு உள்ளார்.
அந்நபரோ, மனையும் கொடுக்காமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளார்.
இதுகுறித்து, அவர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்துமாறு மதுகிரி போலீஸ் நிலையத்திற்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது.
இந்த புகாரை விசாரிப்பதாக கூறி, மதுகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரப்பா, ஒரு நாள் அப்பெண்ணை தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
அங்கு வைத்து, அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். மனமுடைந்த அப்பெண், விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்து உள்ளார்.
தற்போது, டி.எஸ்.பி.,யின் லீலைகள் வெளியுலகிற்கு தெரிவதால், தைரியமாக நேற்று முன்தினம் மதுகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று அவர் மீது பாலியல் புகார் அளித்தார். புகாரின்படி, ராமச்சந்திரப்பா மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடக்கிறது.

