இடுக்கி வனத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 'ரெய்டு'
இடுக்கி வனத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 'ரெய்டு'
ADDED : செப் 29, 2025 02:02 AM
மூணாறு,: வனத்துறை அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு இயக்குனர் மனோஜ்ஆப்ரகாம் தெரிவித்தார்.
கேரளாவில் 71 வன சரக அலுவலகங்களில் நேற்று முன்தினம் 'ஆப்பரேசன் வன பாதுகாப்பு' என்ற பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு இயக்குனர் மனோஜ்ஆப்ரகாம் தெரிவித்தார்.
அதில் மிகவும் கூடுதலாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனசரக அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் இடையே ரூ.லட்சக் கணக்கில் பணம் பட்டுவாடா நடந்தது அம்பலமானது.
இம்மாவட்டத்தில் வல்லகடவு வனசரக அதிகாரியின் அலைபேசியை ஆய்வு செய்த போது ஒப்பந்ததாரர் ஒருவர் வனசரக அதிகாரிக்கு ஜூன் முதல் மூன்று மாதங்களில் ரூ.72.8 லட்சம் கொடுத்ததும், அவர் கூறியபடி எடப்பள்ளி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.1.36 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்தது.
தேக்கடி வனசரக அதிகாரியின் அலைபேசியை ஆய்வு செய்தபோது, அதே ஒப்பந்ததாரர் பல வங்கி கணக்கில் ரூ.31.08 லட்சமும், வேறு இரு ஒப்பந்ததாரர்கள் ரூ.1.95 லட்சம் கொடுத்ததும் தெரியவந்தது.
மறையூர் வனசரக அதிகாரியின் வங்கி கணக்கில் ஒப்பந்ததாரர் ஒருவர் ரூ.57,500ம், காந்தலுார் வனசரக அலுவலகத்தில் 2 அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் வழங்கியதும் தெரியவந்தது.
இச்சம்பவம் வனத்துறை உயர் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.