பதற்றம்! மாண்டியாவில் போலீசார் 2ம் நாளாக தடியடி: காங்., பேனர்களை பா.ஜ., கிழித்ததால் பரபரப்பு
பதற்றம்! மாண்டியாவில் போலீசார் 2ம் நாளாக தடியடி: காங்., பேனர்களை பா.ஜ., கிழித்ததால் பரபரப்பு
ADDED : ஜன 29, 2024 10:54 PM

பெங்களூரு: ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அகற்றியதை கண்டித்து, கெரேகோடு கிராமத்தில் இருந்து, மாண்டியா கலெக்டர் அலுவலகம் வரை 14 கி.மீ., துாரம், ஹிந்து அமைப்பினர், பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் ஊர்வலம் சென்றனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகாவின் புகைப்படம் இருந்த பேனரை கிழித்து, தீ வைத்ததால், ஊர்வலம் சென்றவர்கள் மீது, 2வது நாளாக நேற்றும் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மாண்டியாவில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
***
மாண்டியாவில் இருந்து 14 கி.மீ., துாரத்தில் உள்ளது கெரேகோடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து சொந்தமான நிலத்தில், 108 அடி உயர கம்பம் அமைத்து தேசியக் கொடி ஏற்ற, ஒரு அமைப்பு சில தினங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி இருந்தது. ஆனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றாமல், ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி அறிந்த அரசு அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை கெரேகோடு கிராமத்திற்குச் சென்று, ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அகற்றினர். அரசு உத்தரவின்பேரில் தேசியக் கொடி ஏற்பட்டது. இதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். கெரேகோடு கிராமத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
* வழிபாடு
ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி அகற்றப்பட்டதால், அரசை கண்டித்து, கெரேகோடு கிராமத்தில் இருந்து மாண்டியா கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு முன்பு கிராமத்தில் உள்ள ஹனுமன் கோவிலில், தேங்காய் உடைத்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினரும் கலந்து கொண்டனர்.
மாண்டியா நகருக்குள் ஊர்வலம் வந்தபோது, ஊர்வலத்தில் ஈடுபட்ட சிலர், மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகாவின் புகைப்படத்துடன் இருந்த, பேனர்களை கிழித்தனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் புகைப்படத்துடன் இருந்த, பேனர்கள் மீது கல்வீசி சேதப்படுத்தினர். அங்கு விரைந்து சென்ற மாண்டியா எஸ்.பி., யத்தீஷ் தலைமையிலான போலீசார், பேனர்களை சேதப்படுத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.
* தீவைப்பு
ஆனாலும் எம்.எல்.ஏ., ரவி கானிகாவின் பேனரை கிழித்து, சிலர் தீ வைத்தனர். தீயை போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், மாண்டியா கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நகர்ந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம் முன், தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஊர்வலம் வந்த ஹிந்து அமைப்பினர், தடுப்புகளை தள்ளிக் கொண்டு முன்நோக்கிச் செல்ல முயன்றனர். இதனால் மீண்டும் தடியடி நடத்தி, கூட்டத்தை போலீசார் கலைத்தனர். ஊர்வலமாக வந்தவர்களை குண்டு, கட்டாக துாக்கி கைது செய்தனர்.
* தடியடியில் காயம்
இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் இருக்கும் இடத்திற்கு வந்த, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:
இந்த அரசு அராஜகத்தில் ஈடுபடுகிறது. ஊர்வலம் சென்றவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? தடியடி நடத்தியதால் சிலரின், கண்ணில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களின் கண் பார்வை பறிபோனால் யார் பொறுப்பு? தடியடி நடத்த யார் அனுமதி கொடுத்தது?
பேனர்களை வைக்கக் கூடாது என, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், காங்கிரசார் பேனர்கள் வைத்து இருப்பது ஏன்? பேனர்களை ஊர்வலம் சென்றவர்கள், கிழித்ததில் தவறு இல்லை. இந்த பிரச்னைக்கு, மாண்டியா கலெக்டர் தான் காரணம். முதலில் அவரை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். அரசை கண்டித்து வருகிற 9ம் தேதி, மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். ஹனுமன் கோபத்தால் இலங்கை எரிந்தது போன்று, ஹிந்து அமைப்பினர் கோபத்தால், காங்கிரஸ் அரசு அழியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரச்னையால் மாண்டியா மாவட்டம் முழுவதும், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மாண்டியா அரசியலில் பா.ஜ.,வுக்கு அடித்தளம் இல்லை. இதனால் ஹனுமன் கொடி பிரச்னையை வைத்து, மக்களை துாண்டிவிட்டு, மாண்டியாவில் அரசியல்ரீதியாக நுழைய முயற்சிக்கின்றனர். மாண்டியா மக்கள் சகிப்புத்தன்மை, மதச்சார்ப்பற்றவர்கள். நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள்.
சிவகுமார்,
துணை முதல்வர்
சட்டத்தை மீறி கெரேகோடு கிராமத்தில், ஹனுமன் உருவம் பொறித்த கொடி ஏற்றி உள்ளனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், ஹிந்து அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த.,வினர் சொல்வதை கேட்டு, மாண்டியா கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய முடியாது.
பரமேஸ்வர்,
உள்துறை அமைச்சர்
கர்நாடகாவில் இருப்பது ஹிந்து விரோதி அரசு. இறக்கப்பட்ட ஹனுமன் உருவம் பொறித்த கொடியை மீண்டும் ஏற்ற, அனுமதி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும். துப்பாக்கிசூடு நடத்தினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம்.
ரவி,
முன்னாள் அமைச்சர், பா.ஜ.,