மருமகன்களுக்கு சிபாரிசா? சாம்ராஜ் நகர் பா.ஜ., - எம்.பி., பதில்!
மருமகன்களுக்கு சிபாரிசா? சாம்ராஜ் நகர் பா.ஜ., - எம்.பி., பதில்!
ADDED : பிப் 27, 2024 06:48 AM

சாம்ராஜ் நகர் : ''வேட்பாளராக மருமகன்கள் உட்பட யாருடைய பெயரையும் சிபாரிசு செய்ய மாட்டேன். என்னுடைய அரசியல் வாரிசு என்று, யாரையும் அடையாளப்படுத்தவில்லை,'' என, பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் தெரிவித்தார்.
சாம்ராஜ்நகர் பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத். இவர், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.
இதனால், அவரது மருமகன்கள் ஹர்ஷவர்தன், மோகன் ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தரும்படி, மாமனாருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஆலோசனை
இதையடுத்து, யாருக்கு சீட் வழங்கலாம் என்பது குறித்து, சமீபத்தில், அவருடன் மாநில தலைவர் விஜயேந்திரா ஆலோசனை நடத்தினார். ஆனால், சாம்ராஜ்நகரில் சீனிவாஸ் பிரசாத் நேற்று கூறியதாவது:
அரசியலில் இருந்து மார்ச் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளேன். என் அரசியல் வாரிசு என்று, யாரையும் அடையாளப்படுத்தவில்லை.
வேட்பாளர் குறித்து மருமகன்கள் உட்பட யாருடைய பெயரையும் சிபாரிசு செய்ய மாட்டேன். இது குறித்து, சமீபத்தில் மாநில தலைவர் என்னிடம் ஆலோசித்தார். நான் யாரையும் சிபாரிசு செய்யவில்லை.
சுதந்திரம்
மேலிட தலைவர்கள் கேட்கும்போது என் விருப்பத்தை தெரிவிப்பேன். யார் என்பதை பகிரங்கப்படுத்த முடியாது. ஜனநாயக முறையில், யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட விரும்பலாம். அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது.
பா.ஜ., தேசிய கட்சி என்பதால் வெற்றி நிலவரம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி, வேட்பாளரை தேர்வு செய்வர். அதுவும் கட்சியின் தேசிய பார்லிமென்ட் குழு தான் இறுதி தீர்மானம் எடுக்கும். தேர்தல் விதிமுறைப்படி, 25 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும், நாட்டின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
கோவிந்த்ராஜ்நகரை சேர்ந்த சோமண்ணா, வருணா, சாம்ராஜ்நகர் இரண்டு தொகுதிகளில் களமிறங்கினார். ஒரு எம்.பி.,யாக நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன.
தேர்தல் அரசியல்
நான், 1974ல் மைசூரில் போட்டியிட்டதன் மூலம், தேர்தல் அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தேன். 1977 முதல் சாம்ராஜ்நகரில் போட்டியிட ஆரம்பித்தேன். மார்ச் 17ம் தேதி தேர்தல் அரசியலுக்கு வந்து, 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், அன்றைய தினம் ஓய்வு பெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
