எப்படியும் பா.ஜ., தான் ஜெயிக்க போகுது! காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தி
எப்படியும் பா.ஜ., தான் ஜெயிக்க போகுது! காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தி
ADDED : மார் 12, 2024 11:12 PM
தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு, கட்சியின் தலைவர்களை விட, தொண்டர்கள் தான் அதிகமாக உழைக்கின்றனர். தலைவர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட, தொண்டர்களுக்கு தெரியும். யாரிடம் எப்படி பேசுவது, ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைத்து ஓட்டுகளையும், எப்படி கட்சிக்கு கொண்டு வருவது என்பதில் கைதேர்ந்தவர்கள்.
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கட்சிகளும், வேட்பாளரும் அந்தத் தொண்டர்களை கண்டுகொள்வது இல்லை. அடியோடு மறந்து விடுகின்றனர்; அடுத்த தேர்தலுக்கு தான் நினைவில் வருகின்றனர். ஆனாலும் பழையதை மறந்துவிட்டு, மீண்டும் களத்தில் இறங்கிப் போராடுபவர்கள் தொண்டர்கள் மட்டுமே.
வரும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 20 இடங்களில் வெற்றி பெற, ஆளுங்கட்சியான காங்கிரஸ் இலக்கு வைத்துள்ளது. பா.ஜ., கூட்டணி தலைவர்கள் 28 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர்.
காங்கிரஸ் அரசு ஐந்து வாக்குறுதிகளை அமல்படுத்தி உள்ளது. அதன்மூலம் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்பது கணக்கு. வாக்குறுதித் திட்டங்களை பற்றி, வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்வதற்கு, காங்கிரஸ் தனது தொண்டர்களை தான் முழுக்க, முழுக்க நம்பி உள்ளது.
ஆனால், காங்கிரஸ் தொண்டர்களுக்கே, தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று, நம்பிக்கை இல்லை.
அரசு ஐந்து வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தி இருந்தாலும், பெரும்பாலோனார் அநத திட்டங்களால் பயன் அடையவில்லை. தவிர மாநிலத்தில் எங்கும் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை.
ராமர் கோவில்
போதா குறைக்கு வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு வேறு. மக்கள் பிரச்னைகளுக்கு, அரசால் தீர்வு காண முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது மக்களிடம் சென்று, 'காங்கிரஸ் அரசு அந்த வேலை செய்து உள்ளது... இந்த வேலை செய்து உள்ளதென, 'புருடா'விட்டால் ஏற்றுக்கொள்வரா?' என, தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி, அதை திறப்பதற்கு முழுக்க, முழுக்க பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளே காரணம். ராமர் கோவில் திறப்பால் ஹிந்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ஆனால் கோவில் திறப்பு விழாவை, காங்கிரஸ் தலைமை புறக்கணித்தது, அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை.
'அரசியலை அரசியலாக பார்த்திருக்க வேண்டும். அதைவிட்டு மதம், கடவுள் சார்ந்த விஷயத்தில், விளையாடக் கூடாது' என, காங்கிரஸ் தலைமை மீது, அக்கட்சியின் தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர்.
மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்கும்போது, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது பற்றிக் கேட்டால், 'என்ன சொல்வது?' என்றும், காங்கிரஸ் தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
'எப்படியும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர போவது இல்லை. கர்நாடகாவிலும் அதிக இடங்களில் ஜெயிக்க போவது இல்லை.
பா.ஜ., தான் வெற்றி பெற போகிறது. நாங்க கஷ்டப்பட்டு பிரசாரம் பண்ணி என்ன நடக்க போகுது?' என, தங்கள் மனக்குமுறல்களை காங்., தொண்டர்கள் கொட்டி வருகின்றனர்.
- நமது நிருபர் -

