நீண்ட தாமதத்துக்கு பின் வந்தது 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்
நீண்ட தாமதத்துக்கு பின் வந்தது 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்
ADDED : ஜூலை 23, 2025 02:10 AM

புதுடில்லி : அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களை உடைய, 'அப்பாச்சி' ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தன.
நம் பாதுகாப்பு படைகளுக்கு, 13,952 கோடி ரூபாய் செலவில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள் வாங்க, 2015ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப் பட்டது.
இதன்படி, நம் விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதை தொடர்ந்து, கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, 2020ம் ஆண்டு ஒப்பந்தம் போடப் பட்டது.
கடந்த ஆண்டே நம் ராணுவத்திடம் இந்த ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 மாத காலதாமதத்திற்கு பின், 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை முதல் தவணையாக அமெரிக்கா நேற்று ஒப்படைத்தது.
'பாலைவன' கருப்பொருளில் வண்ணம் தீட்டப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர்கள், அமெரிக்காவிலிருந்து போக்குவரத்து விமானத்தில் வந்தடைந்தன.
இது உலகின் சிறந்த போர் ஹெலிகாப்டர்களில் ஒன்று.
இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானின் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிறுத்தப்பட உள்ளன. மேலும் லே-, லடாக் பகுதியிலும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.
அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வருகையால், நம் ராணுவத்தின் திறன் மேலும் வலிமை பெறும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

