UPDATED : ஜன 11, 2024 06:46 PM
ADDED : ஜன 04, 2024 11:52 PM

சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், கட்டடங்களுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வீடுகள் விற்பனை, 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனையின்போது, நிலத்துக்கு கிரைய பத்திரமும், கட்டடத்துக்கு கட்டுமான ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டு வந்தது. தமிழக அரசு இந்த நடைமுறையை மாற்றி, நிலத்துக்கும், கட்டடத்துக்கும் ஒரே பத்திரமாக பதிவு செய்யும் புதிய முறையை டிச., 1ல் அமலுக்கு கொண்டு வந்தது.
இதன் விளைவாக பத்திரப்பதிவுக்கான செலவு எகிறியது. இரு மடங்கு கட்டணம் செலுத்த நேரிட்டதால் வீடு வாங்க விரும்பியவர்கள் திகைத்தனர். வீடு வாங்கும் யோசனையை பலர் கைவிட்டனர்.
இது குறித்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' தென் மண்டல தேசிய துணை தலைவர் எஸ்.ஸ்ரீதரன். சென்னை பிரிவு தலைவர் எஸ்.சிவகுருநாதன், தமிழக பிரிவு தலைவர் ஆர்.இளங்கோவன், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகி எல்.சாந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு, ஒரே பத்திரம் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்துவதாக தமிழக அரசு கூறியது.
ஆனால், அந்த மாநிலங்களில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாக ஆராயாமல், நம் அதிகாரிகள் அவசர கோலத்தில், புதிய நடைமுறையை அறிவித்தனர்.இதில் கட்டடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்க, மூன்று நிலைகள் முதலில் அறிவிக்கப்பட்டன. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது திரும்ப பெறப்பட்டு, தெரு வாரியாக ஒரே மதிப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், பதிவு கட்டணம் விதிப்பதில், மூன்று நிலைகள் இன்னும் தொடர்கிறது.
* இதன்படி, 50 லட்சம் ரூபாய்க்குள் வரும் வீடுகளுக்கு, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம், 6 சதவீதம்
* அதற்கு மேல், 3 கோடி ரூபாய் வரையிலான விடுகளுக்கு, 7 சதவீதம்
* மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள வீடுகளுக்கு, 9 சதவீதம் என்ற கட்டண விகிதம் தொடர்கிறது.
சென்னையில், 44 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் வீடு வாங்கினால், பழைய நடைமுறையில, பத்திரப்பதிவு செலவு 1.35 லட்சம் ரூபாயில் முடியும். அது தற்போது 2.91 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. 3 கோடியில் வீடு வாங்குபவர் 1.81 லட்சமும், 3 கோடிக்கு மேல் வீடு வாங்குபவர, 3.92 லட்சமும் பத்திரப் பதிவுக்காக செலவிட வேண்டியுள்ளது.
இந்த பிரச்னைகளை பதிவுத் துறை அமைச்சரிடம் விரிவாக விளக்கினோம். ஆனால், பதிவுத் துறை அதிகாரிகள் அரசுக்கு தவறான தகவல்களை அளித்து, குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.தற்போது, தெரு வாரியாக வெளியிடப்பட்ட மதிப்புகளும் மக்களிடம் கருத்து கேட்காமல் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுவும் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக இல்லை. இந்த குளறுபடியால் ஒரே மாதத்தில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவு கட்டணம் உயர்வு, கூட்டு மதிப்பு என, அடுத்தடுத்து சுமையை அதிகரிப்பதால் வீடு வாங்க விரும்பும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த விலை வீடுகளுக்கு 4 சதவீதம், அதிக விலை வீடுகளுக்கு 5 சதவீதம் என பதிவு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.கட்டுமான நிலையில் கட்டடம் இருப்பதாக, எப்படி பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற குழப்பத்துக்கு, சட்ட ரீதியாக தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.