மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
ADDED : ஜூலை 23, 2025 01:13 AM
மும்பை: மும்பை புறநகர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2006, ஜூலை 11ம் தேதி, மும்பை புறநகர் ரயில்களில் சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து 7 வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியது.
இந்த கொடூர சம்பவத்தில் 180க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனையும், எஞ்சியவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2015ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, 12 பேரும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசு மற்றும் இவ்வழக்கை விசாரித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, நாக்பூர், அமராவதி மற்றும் புனே சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரில், ஏழு பேர் விடு தலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சித்திக் என்பவரும் ஒருவர்.