ADDED : மார் 14, 2024 11:18 PM
புதுடில்லி:பணமோசடி வழக்கில் கீழ் நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு 2021ம் ஆண்டு நவ., 17ல் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, புதிய மதுபான கொள்கையை 2022ம் ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்த டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா, இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த துணை முதல்வரான மணீஷ் சிசோடியா மற்றும் கலால் துறை அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து முதல்வருக்கு எதிராக கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. பணமோசடி குறித்து விசாரணைக்கு ஆஜராக முதல்வர் மறுப்பது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, வரும் 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

