ADDED : மார் 03, 2024 07:01 AM
பெங்களூரு: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மோகன் நாயக்குக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், சமூக ஆர்வலராகவும் இருந்தார். இவர் 2017 செப்டம்பர் 5ல், பெங்களூரின், ராஜராஜேஸ்வரி நகர் இல்லம் அருகில், மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மோகன் நாயக் உட்பட, சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மோகன்நாயக்குக்கு, 2023 டிசம்பர் 7ல் கர்நாடக உயர்நீதிமன்றம், ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்தது. அதேபோன்று கவுரி லங்கேஷின் சகோதரி கவிதாவும் கூட, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த இரண்டு மனுக்களையும், ஏப்ரல் 9ல் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மனு தொடர்பாக, மோகன் நாயக்குக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
