நம்பவே முடியலையே; என்கவுன்டர் சம்பவம் நாடகம் போல இருப்பதாக ஐகோர்ட் சந்தேகம்!
நம்பவே முடியலையே; என்கவுன்டர் சம்பவம் நாடகம் போல இருப்பதாக ஐகோர்ட் சந்தேகம்!
ADDED : செப் 25, 2024 01:40 PM

தானே: மும்பையில் நர்சரி பள்ளி மாணவிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கியவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடகம் போல் தெரிவதாக ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு தனியார் பள்ளியில் இரு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து மாநிலம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. பள்ளி துப்புரவு பணியாளர் அக்சய் ஷிண்டே என்பவரை கடந்த ஆக.17ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஆக.,1ம் தேதி அக்சய் ஷிண்டே பள்ளி கழிவறையில் வைத்து இரு மாணவிகளையும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
சில தினங்களுக்கு முன், தலோஜா சிறையிலிருந்து விசாரணைக்காக அக்சய் ஷிண்டேயை போலீசார் வேனில் அழைத்துச்சென்றனர். அப்போது போலீசில் பிடியிலிருந்து தப்பியோட முயன்றதாகவும், அப்போது போலீசாரிடமிருந்த துப்பாக்கியை பறித்து சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீஸ்காரர் சுட்டதில் அக்சய் ஷிண்டே உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ஐகோர்ட் வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஒரு சாதாரண மனிதனரால் எப்படி போலீசாரை சுட முயற்சிக்க முடியும். இதை நம்புவது கடினமாக இருக்கிறது' என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'தப்பியோட முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடகம் போல் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட அக்சய் ஷிண்டேவை சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்தது முதல் சிவாஜி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தது வரை சி.சி.டி.வி., காட்சிகளை பாதுகாக்க வேண்டும்' என போலீசாருக்கு உத்தரவிட்டனர்.