மே.வங்கத்தில் 26,000 ஆசிரியர் நியமனம் செல்லாது! சம்பளத்தை திரும்ப தரவும் ஐகோர்ட் உத்தரவு
மே.வங்கத்தில் 26,000 ஆசிரியர் நியமனம் செல்லாது! சம்பளத்தை திரும்ப தரவும் ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 22, 2024 11:45 PM
கோல்கட்டா: 'சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் நடைபெற்றதால், மேற்கு வங்க அரசால், 2016ல் நடத்தப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செல்லாது. இவ்வாறு முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 26,000 பேர், இதுவரை பெற்ற சம்பளத்தை, 12 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும்' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, 2016ல் தேர்வு நடத்தப்பட்டது.
மாநில ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
விசாரணை
இந்த மோசடி தொடர்பாக, முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு அமர்வை அமைத்து விசாரிக்கும்படி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, நீதிபதிகள் தேபாங்சு பாசக், முகமது ஷபார் ரஷிதி அமர்வு விசாரித்தது. கடந்த 20ம் தேதி விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மொத்தம், 24,640 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில், 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், 25,753 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் அப்பட்டமாக பல மோசடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. முதலில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பலர் தேர்வு எழுதாமல், வெற்று விடைத்தாள்களை கொடுத்துள்ளனர்.
தேர்வு எழுதியவர்களில், முதல்நிலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து சேகரிக்கப்படவில்லை. ஆசிரியர்களை தேர்வு செய்யும் நடைமுறைக்கான காலக்கெடு முடிந்த பிறகும் பலருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் நிலையில் இருந்து, முடிவு எடுப்பவர்கள் வரை, அதிகாரிகளில் இருந்து பணி நியமனம் பெற்றவர்கள் என, அனைத்து நிலைகளிலும் கூட்டாக மோசடி நடக்காமல், இது போன்ற முறைகேட்டை நடத்தியிருக்க முடியாது.
இதுபோல், முறைகேடு செய்து ஆசிரியர் பணியிடங்களை பெறுபவர்களுக்கு உரிய தகுதிகள் உள்ளதா என்பதும் தெரியவில்லை. இவர்கள், மாணவர்களுக்கு என்ன கற்றுத் தந்துவிடப் போகின்றனர்.
பணி நியமனம்
இது மாணவர்களின் வாழ்க்கையுடனும், நம் நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடும் போக்காகவே பார்க்கப்படுகிறது.
இதில் உண்மையில் தகுதியுள்ளவர்களுக்கும் பணி நியமனம் கிடைத்திருக்கலாம். ஆனால், பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதால், இந்த தேர்வு செல்லாது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு மோசடியாக சேர்ந்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பளத்தை, ஆண்டுக்கு, 12 சதவீத வட்டியுடன், அரசு வசூலிக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக, தான் பதிவு செய்துள்ள நான்கு வழக்குகளை, சி.பி.ஐ., தொடர்ந்து விசாரிக்கலாம். மோசடியில் தொடர்புடையவர்கள், மோசடி செய்து பணி நியமனம் பெற்றவர்கள் என, அனைவரிடமும் விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால், காவலில் எடுத்தும் விசாரிக்கலாம்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, 15 நாட்களுக்குள், இந்த காலியிடங்களுக்கு, மாநில ஆசிரியர் தேர்வாணையம் உரிய முறையில் தேர்வை நடத்த வேண்டும். அது மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
நியமனம் பெற்றவர்களில் ஒருவரான சோமா தாஸ் என்பவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால், மனிதாபிமான அடிப்படையில் பணியில் தொடர, இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் அனுமதி அளித்திருந்தார்; அது தொடரும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள, 42 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.
ஏற்கனவே, சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான வன்முறை விவகாரம், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, அந்தக் கட்சிக்கு பெருத்த அடியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

