நெருங்கும் டாணா புயல்: உஷார் நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம்
நெருங்கும் டாணா புயல்: உஷார் நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம்
UPDATED : அக் 24, 2024 10:22 PM
ADDED : அக் 24, 2024 10:19 PM

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகி உள்ள டாணா புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்க உள்ளதால், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.
இது குறித்த முக்கிய அம்சங்கள்
1. இந்திய வானிலை மையத்தின் கணிப்பின்படி இந்த புயலானது பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகம் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் கரையை கடக்கும்.
2. இன்று மாலை 4:30 மணி நிலவரப்படி , இந்த புயலானது பாரதீப் தென் கிழக்கே 150 கி.மீ., தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 250 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
3. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.43,374 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என இன்று மாலை கூறியிருந்தார்.
4. சூழ்நிலையை இரவு முழுதும், தலைமைச்செயலகத்தில் இருந்து கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
5.கோல்கட்டா, ஹவுரா, ஹூக்ளி மற்றும் 24 பராகன்ஸ் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் அதிதீவிர கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
6.வடகிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். புயல் கரையை கடக்கும் போது காற்றானது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வீசலாம்.
7. மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. மேற்கு வங்கம்,ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில 170 ரயில்களை ரத்து செய்துள்ளது.
8. கிழக்கு ரயில்வேயானது 68 புறநகர் ரயில்களை ரத்து செய்துள்ளது. சீல்டா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் உள்ளூர் ரயில்களும் முற்றிலும் ரத்து செய்துள்ளது.
கோல்கட்டா துறைமுக அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
9. கோல்கட்டா சர்வதேச விமான நிலையத்திலும் இன்று மாலை6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மூடப்பட்டு உள்ளது. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10. மாநில பேரிடர் மீட்பு படையில் இருந்து 13 குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவில்இருந்து 14 குழுவினர் கடற்கரையோர பகுதிகளில் மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். கடலில் ஏற்படும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கடலோர காவல்படையும் தயார் நிலையில் உள்ளது.