ரூ.54,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
ரூ.54,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
ADDED : மார் 20, 2025 10:55 PM

புதுடில்லி :நம் படைகளுக்கு நீர்மூழ்கி கப்பலுக்கான ஏவுகணைகள், முன்னெச்சரிக்கை செய்யும் விமான தொழில்நுட்பம், பீரங்கி வாகனங்களுக்கான இன்ஜின் உள்ளிட்ட, 54,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு, ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ அமைச்சகம் இந்தாண்டை, சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. இதன்படி, கொள்முதல்களில் ஒப்புதல் அளிப்பதற்காகும் காலத்தை இன்னும் குறைப்பதற்கு சில நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலம் வெகுவாக குறையும். இதற்கேற்ப நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வானில் இருந்து வரும் ஆபத்துகளை முன்னதாகவே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் போர் விமானங்களுக்கான தொழில்நுட்ப சாதனம், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகள், டி-90 பீரங்கி வாகனங்களுக்கான இன்ஜின்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவும், கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இவை, 54,000 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.