ADDED : பிப் 10, 2024 11:48 PM

பெங்களூரு : புலி நகம் செயின் அணிந்திருந்த வழக்கில் கைதான, 'பிக்பாஸ்' பிரபலம் வர்த்துார் சந்தோஷை, போலீஸ் சீருடையில் சென்று கவுரவித்ததால், எஸ்.ஐ., துாக்கி அடிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு வர்த்துாரில் வசிப்பவர் வர்த்துார் சந்தோஷ். ஹல்லிகர் இன மாடுகளை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த முடிந்த 'கன்னட பிக்பாஸ்' போட்டியில், போட்டியாளராக பங்கேற்றார்.
அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த, புலி நக செயின் சர்ச்சையை கிளம்பியது. இதையடுத்து வனத்துறையினர், பிக்பாஸ் வீட்டிற்கு சென்று, வர்த்துார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வந்தவர், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வர்த்துார் சந்தோஷ் வீட்டிற்கு, வர்த்துார் போலீஸ் நிலைய எஸ்.ஐ., திம்மராயப்பா, போலீஸ் சீருடையில் சென்று, வர்த்துார் சந்தோஷுற்கு சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து கவுரவித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. புலி நக செயின் அணிந்திருந்த வழக்கில் கைதானவரை, எஸ்.ஐ., வீட்டிற்கே சென்று கவுரவித்தது ஏன் என்று, நெட்டின்சன்கள் விமர்ச்சிக்க ஆரம்பித்தனர்.
இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து எஸ்.ஐ., திம்மராயப்பாவை, ஆடுகோடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.