கணவன்மார்கள் சோம்பேறிகளா? திடீரென கிளம்பிய எதிர்ப்பு; மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட்
கணவன்மார்கள் சோம்பேறிகளா? திடீரென கிளம்பிய எதிர்ப்பு; மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட்
ADDED : செப் 27, 2024 03:45 PM

புதுடில்லி: 'பிக் பில்லியன் டேஸ்' விற்பனையையொட்டி பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வெளியிட்ட விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களை கவருவதற்கும், தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளை விற்று தீர்க்கவும், ஆண்டுதோறும் 'பிக் பில்லியன் டேஸ்' எனும் பெயரில் குறைந்த விலையில் பொருட்களை பிளிப்கார்ட் நிறுவனம் விற்பது வழக்கம். அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் பிரைம் வாடிக்கையாளர்களுக்கும், இன்று நள்ளிரவு துவங்கி அக்.,6ம் தேதி வரை பிற வாடிக்கையாளர்களுமான விற்பனை நடக்கிறது.
இந்த 'பிக் பில்லியன் டேஸ்' விற்பனை தொடர்பான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அனிமேஷன் முறையில் செய்யப்பட்டுள்ளஅந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள வீடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், 'பிக் பில்லியன் டேஸ்' விற்பனையை பயன்படுத்தி, கணவனுக்கு தெரியாமல் ஆன்லைன் மூலம் ஹேண்ட் பேக்குகளை வாங்கி, அதனை பதுக்கி வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஆண்களை சோம்பேறிகள், திறனற்றவர்கள் என்பதை போல சித்தரிப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆண்கள் நலச்சங்கமும் கண்டனத்தையும் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்த வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட பிளிப்கார்ட், அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளது.