பிரபல காலணி பிராண்டுகள் இந்தியாவில் கிடைக்காதா? அரசின் தரச்சான்று கட்டுப்பாட்டால் சிக்கல்
பிரபல காலணி பிராண்டுகள் இந்தியாவில் கிடைக்காதா? அரசின் தரச்சான்று கட்டுப்பாட்டால் சிக்கல்
UPDATED : ஜூன் 12, 2025 05:52 AM
ADDED : ஜூன் 12, 2025 05:04 AM

புதுடில்லி: இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளதால், உலகளவில் பிரபல விளையாட்டு காலணி பிராண்டுகளான நைக், அடிடாஸ், பியூமா ஆகியவை அடுத்தாண்டு இறுதியிலிருந்து இந்தியாவில் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து தரச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரக்குறைபாடு
அதாவது பி.ஐ.எஸ்., அதிகாரிகள் உலகெங்கும் உள்ள இந்நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் ஆய்வுப்பணிகள் இன்னும் முழுவீச்சில் துவங்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்வரை, 130 வகையான பொருட்களுக்கு மட்டுமே தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், இது உடனடியாக, 730 ஆக அதிகரிக்கப்பட்டது. அன்றாடம் பயன்படுத்தப்படும் பிரெஷர் குக்கர், காஸ் அடுப்பு, பேட்டரி செல், மொபைல் சார்ஜர் என அனைத்துக்கும் பி.ஐ.எஸ்., தரச்சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான பொம்மைகள், பெண்களுக்கான சானிட்டரி பேட் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர் ஆகியவையும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்பின், கடந்த மார்ச் மாதம் டில்லி, லக்னோ, கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 'அமேசான், பிளிப்கார்ட்' கிடங்குகளில் ரெய்டு நடத்தப்பட்டு, தரக்குறைபாடுள்ள, 1,000க்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவிலும் அதிக தரத்திலான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசும், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயலும் நினைக்கின்றனர். ஆனால், இதை அமல்படுத்துவதில்தான் சிக்கல் உள்ளது.
காலக்கெடு
தரச்சான்றிதழ் வழங்க பி.ஐ.எஸ்., அதிகாரிகள் இந்த பிராண்டுகளின் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இவை அனைத்தும் வெவ்வேறு நாடுகளில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், சில நிறுவனங்கள் உற்பத்தியை வியட்நாம், சீன நிறுவனங்களுக்கு அவுட் சோர்சிங் செய்து விடுகின்றன. சீனாவுக்கு சென்று ஆய்வு நடத்துவது முடியாத காரியம் என பி.ஐ.எஸ்., அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.
இன்னும் சில நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை வந்து பார்வையிடுவதற்கான அதிகாரிகளின் பயணச்செலவுகளை தாங்களே ஏற்பதாக தெரிவித்தும், நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழும் என்ற காரணத்துக்காக இவை மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு காலக்கெடு, அடுத்தாண்டு இறுதிக்குள் முடிவடைகிறது. அதற்குள்ளாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி சான்று வழங்க வேண்டும் அல்லது அரசு மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இல்லையென்றால் வெளிநாட்டு பிராண்டுகள் இந்தியாவிலிருந்து மறைந்து போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

