ADDED : டிச 13, 2024 05:33 AM

மைசூரு: சாமுண்டி மலையின், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு காணிக்கையாக வந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள சேலைகளை, கள்ளச்சந்தையில் விற்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, மைசூரின் கே.ஆர்.போலீஸ் நிலையத்தில், வீடியோ ஆவணங்களுடன் சமூக ஆர்வலர் சினேஹமயி கிருஷ்ணா, நேற்று புகார் அளித்தார்.
புகாரில் கூறியதாவது:
மைசூரு சாமுண்டி மலையின், சாமுண்டீஸ்வரி தேவிக்கு காணிக்கையாக வந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சேலைகளை, சாமுண்டீஸ்வரி கோவில் செயலர் ரூபா, காரில் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்கிறார்.
ஊழியர் மூலமாக அம்மன் சேலைகளை திருடும் ரூபா, அவற்றை விற்று கிடைக்கும் பணத்தை, தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார். அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார். இவருக்கு கோவிலின் சில அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்பு தருகின்றனர்.
சமீபத்தில் எனக்கு கிடைத்த, இரண்டு வீடியோக்களை அளித்துள்ளேன். இவற்றில் சேலைகளை இளைஞர் ஒருவர், காரில் கொண்டு செல்வது தென்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

