வாக்குறுதி திட்டங்கள் இருக்குமா? கார்கே கண்டிப்பால் சிவகுமார் 'பல்டி'
வாக்குறுதி திட்டங்கள் இருக்குமா? கார்கே கண்டிப்பால் சிவகுமார் 'பல்டி'
ADDED : நவ 01, 2024 07:11 AM

பெங்களூரு: 'சக்தி' திட்டம் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்ததைத் தொடர்ந்து, மாநில தலைவரும் துணை முதல்வருமான சிவகுமார் 'பல்டி' அடித்துள்ளார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவகுமார் பதவியேற்றனர். தேர்தலுக்கு முன்பு அளித்திருந்த வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்துவதில், முதல்வர் சித்தராமையா அதிக ஆர்வம் காட்டினார்.
நிதிச்சுமை
இதற்கு மாநில காங்கிரஸ் தலைவரான, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, சில தலைவர்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை. இந்தத் திட்டங்களை செயல்படுத்த, அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி இருக்காது என, கட்சி தலைவர்கள் கருதினர்.
ஆனாலும் முதல்வர் ஐந்து வாக்குறுதித் திட்டங்களில், 'சக்தி' திட்டத்தை முதலில் செயல்படுத்தினார். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக கர்நாடகா முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதனால், குஷியடைந்த பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா, தீர்த்த யாத்திரை செல்கின்றனர்.
திட்டங்கள் வெற்றி அடைந்தாலும், கட்சியில் அபஸ்வரங்களும் எழுந்தன. இலவச திட்டங்களால், வளர்ச்சிப் பணிகளுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. திட்டங்களை மறுபரிசீலனை செய்யும்படி, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஆனால், 'எந்த காரணத்தைக் கொண்டும், வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்படாது' என, முதல்வர் திட்டவட்டமாக கூறினார்.
நேற்று முன்தினம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், 'டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்' என சில மாணவியர் இ - மெயில் மற்றும் 'எக்ஸ்' வலைதளம் வழியாக கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்' என்றார்.
சலசலப்பு
இந்த கருத்தால், சக்தி திட்டம் தொடராதோ என்ற சந்தேகம் எழுந்து, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தத் திட்டம் குறித்து முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மாறுபட்ட கருத்துக்களை கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'சக்தி' திட்டம் விஷயத்தில் மாநில அரசுக்கும், காங்கிரசுக்கும் 'பனிப்போர்' ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.
பெங்களூரின், குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், வல்லபபாய் படேல் ஜெயந்தி நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வந்திருந்தார். அப்போது அவர், துணை முதல்வர் சிவகுமாரிடம், 'வாக்குறுதித் திட்டங்கள் குறித்து, ஏதேதோ பேசியுள்ளீர்களே?' என கேள்வி எழுப்பினார்.
அறிவுரை
இதற்கு பதிலளித்த சிவகுமார், ''நான் எதுவும் கூறவில்லை,'' என்றார். கார்கே ''நீங்கள் நாளிதழ்கள் படிக்கவில்லையா? நான் படித்தேன். நீங்கள் என்ன சொன்னீர்களோ? அது நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் என்ன உள்ளதோ, அதன்படி வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்துங்கள்,'' என அறிவுறுத்தினார்.
கார்கே உத்தரவுக்கு பின், கருத்தை மாற்றிக்கொண்ட சிவகுமார், ''எந்த காரணத்துக்காகவும், வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்படாது. எங்கள் அரசு இருக்கும் வரை, வாக்குறுதித் திட்டங்கள் இருக்கும்,'' என கூறினார்.