நான் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி
நான் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி
ADDED : நவ 06, 2025 10:53 PM

“நான் ஓய்வு பெற்ற பின்தான் வழக்கின் விசாரணை நடக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசிடம் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதை, தலைமை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, “இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வேண்டிய தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி வேறு ஒரு முக்கிய வேலையில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்,” என, மீண்டும் கோரிக்கை வைத்தார்.
அதைக்கேட்டு அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி கவாய், “நான், நவம்பர் 24ம் தேதி ஓய்வு பெறுகிறேன். அதற்கு பின்தான் இந்த வழக்கைநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா? அப்படி எதுவும் இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறி விடுங்கள். வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்போது இதை விசாரித்து முடிப்பது, எப்போது தீர்ப்பு எழுதி முடிப்பது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என, அதிருப்தியுடன் தெரிவித்தார்.
- டில்லி சிறப்பு நிருபர் -

