‛‛நீங்கள் நலமா'' - ஸ்டாலின் திட்டம்: ‛‛நாங்கள் நலமாக இல்லை'' - இ.பி.எஸ்., காட்டம்
‛‛நீங்கள் நலமா'' - ஸ்டாலின் திட்டம்: ‛‛நாங்கள் நலமாக இல்லை'' - இ.பி.எஸ்., காட்டம்
UPDATED : மார் 06, 2024 03:26 PM
ADDED : மார் 06, 2024 01:27 PM

சென்னை: 'நீங்கள் நலமா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது குறித்து, நாங்கள் நலமாக இல்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க அரசின் சீர்மிகு திட்டங்கள் பொதுமக்களை உடனுக்குடன் சென்றடைந்து, பயன்பெறுவதை உறுதி செய்திட ஏதுவாக 'நீங்கள் நலமா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தின் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைச் சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் இத்திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன்.
ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பது தான் எனக்கு முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
நாங்கள் நலமாக இல்லை
'நீங்கள் நலமா திட்டம் குறித்து இ.பி.எஸ்., சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'நீங்கள் நலமா' என்று முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். நாங்கள் நலமாக இல்லை. நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!
சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழகம் ஆளாச்சு!. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

