நாங்கள் நாட்டின் குடிமக்கள் இல்லையா? ஜெய்ஹிந்த் குடிசைவாசிகள் ஆவேசம்
நாங்கள் நாட்டின் குடிமக்கள் இல்லையா? ஜெய்ஹிந்த் குடிசைவாசிகள் ஆவேசம்
ADDED : ஜூலை 11, 2025 09:19 PM
புதுடில்லி:நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?' என, மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் இருந்து, புதுடில்லி வசந்த் குஞ்ச் ஜெய்ஹிந்த் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
புதுடில்லி வசந்த் குஞ்ச் ஜெய்ஹிந்த் குடிசைப் பகுதியில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் மூன்று மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வினியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல ஆண்டுகளாக வசிக்கும் ஷ்யாம் சிங், “பல நாட்களாக மின்சாரம் அல்லது குடிநீர் இல்லாமல் தவிக்கிறோம். எந்த அறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுஉள்ளது.
''துணை ராணுவம், போலீஸ் ஆகியோருடன் வந்த மின்சார வாரிய ஊழியர்கள், மின் இணைப்புகளை துண்டித்தனர். இதுவரை, கட்டணம் எதுவும் நிலுவயில் இல்லை. ஆனால், ஏன் துண்டித்தனர் என விளக்கமும் அளிக்கவில்லை,” என்றார்.
இங்கு வசிக்கும் பாத்திமா, “மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை விடுமுறைக்குப் பின், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுவரை மின்சார கட்டணத்தை சரியாகத்தான் செலுத்தி வந்துள்ளோம். ஆனால், எதற்காக இணைப்பைத் துண்டித்தனர் என்றுதான் தெரியவில்லை,” என்கிறார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
டில்லியில் நடப்பது ஒரு முகாமைப் பற்றியது மட்டுமல்ல. குஜராத், மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் இதேபோன்ற சம்பவங்களை பார்த்துள்ளோம். வங்காள மொழி பேசும் மக்களை குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கவலைக்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

