கொரோனா தடுப்பூசியால் வாதம்? வழக்கு தொடர கோர்ட் அறிவுரை
கொரோனா தடுப்பூசியால் வாதம்? வழக்கு தொடர கோர்ட் அறிவுரை
ADDED : ஏப் 22, 2025 12:08 AM

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டதால், கீழ்மூட்டு வாதம் ஏற்பட்டதாக மனு தாக்கல் செய்தவரிடம், நஷ்டஈடு வழக்கு தொடரும்படி உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது.
கடந்த 2020-ல் கொரோனா பரவியபோது, அதை கட்டுப்படுத்துவதற்காக, 'கோவிஷீல்டு, 'கோவாக்சின்' தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. நம் நாட்டில் கோடிக்கணக்கானோர், இரண்டு தவணைகளாக அவற்றை போட்டுக் கொண்டனர்.
இழப்பீடு
அவர்களில் சிலர், தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், 100 சதவீதம் அளவுக்கு கீழ்மூட்டு வாத குறைபாடு ஏற்பட்ட ஒருவர், கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்ட பின், பக்க விளைவுகளால் அவதிப்பட்டு கீழ்மூட்டு வாத குறைபாடு ஏற்பட்டது.
'எனவே, சிகிச்சை செலவு, எதிர்கால மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்கும்படி தடுப்பூசியை தயாரித்த, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' மற்றும் தடுப்பூசி மையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
'என் உடல் ஊனத்துக்கு சிகிச்சையே அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்டு வரும் பக்க விளைவுகள், அது தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் வகையில் பொருத்தமான வழிகாட்டுதல்களை வகுக்கும்படி உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'இதற்கு ரிட் மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? நஷ்டஈடு வழக்கை தாக்கல் செய்யுங்கள். வழிகாட்டுதல்களை வழங்கக் கோரும், உங்களுடைய ரிட் மனுவை இங்கேயே நிலுவையில் வைத்தால், 10 ஆண்டுகளுக்கு எதுவும் நடக்காது.
நஷ்ட ஈடு
'குறைந்தபட்சம் வழக்காக தொடர்ந்தால், ஓராண்டு அல்லது இரண்டு - மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது உங்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்கும்' என, மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர், 'ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன' என்றார்.
உடனே நீதிபதிகள், 'மனுதாரர் விரும்பினால், இதையும் நிலுவையில் வைக்கலாமா?' என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நஷ்டஈடு வழக்கு தாக்கல் செய்வது குறித்து மனுதாரருடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.