முதல்வர் ஷிண்டேவுடன் வாக்குவாதம் துணை முதல்வர் அஜித் பவார் வெளிநடப்பு?
முதல்வர் ஷிண்டேவுடன் வாக்குவாதம் துணை முதல்வர் அஜித் பவார் வெளிநடப்பு?
ADDED : அக் 11, 2024 11:39 PM

மும்பை : அமைச்சரவை குழு கூட்டத்தின்போது, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், துணை முதல்வர் அஜித் பவாருக்கும் கடும் வாக்குவாதம் எழுந்ததை அடுத்து, கூட்டத்தில் இருந்து அஜித் பவார் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்புதல் தர மறுப்பு
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக உள்ளனர்.
மஹாராஷ்டிராவுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தேர்தலை மனதில் வைத்து நிறைவேற்றப்பட வேண்டிய சில மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக, அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பல்வேறு திட்டங்களை முன்மொழிந்ததாகவும், அதில் சில திட்டங்களுக்கு துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒப்புதல் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
முன் அனுமதி
குறிப்பாக, சரத் பவாரிடம் இருந்து வந்த சில திட்டங்களை முதல்வர் முன்மொழிந்ததாகவும், அதற்கு ஒப்புதல் தர அஜித் பவார் மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இதனால், அமைச்சரவை கூட்டத்தில் இருந்து அஜித் பவார் பாதியில் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அஜித் பவாரிடம் கேட்டபோது, “முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் பட்னவிசின் முன் அனுமதியுடன் தான் கூட்டத்தில் இருந்து சீக்கிரம் புறப்பட்டேன். ஏற்கனவே திட்டமிட்டு இருந்த கூட்டம் மற்றும் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால், கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினேன்,” என்றார்.