மணிப்பூரில் மூன்று மாவட்டங்களில் ஆயுதங்கள், வெடி மருந்துகள் பறிமுதல்
மணிப்பூரில் மூன்று மாவட்டங்களில் ஆயுதங்கள், வெடி மருந்துகள் பறிமுதல்
ADDED : செப் 28, 2024 11:33 PM

இம்பால்: மணிப்பூரில் சமீபத்தில் இனக்கலவரம் நடந்த மூன்று மாவட்டங்களில் பயங்கர ஆயுதங்கள், வெடி மருந்துகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடியின சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கலவரம் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக காங்கோங்பி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய போராளிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் காங்கோங்பி, சுராசந்த்பூர், தவுபால் மாவட்டங்களில் மணிப்பூர் போலீசார், அசாம் ரைபில் படையினர், மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள், எலக்ட்ரானிக் டெடனேட்டர்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே, கோங்காங்பி, சுராசந்த்பூர் மாவட்டங்களில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
'இம்பால் பள்ளத்தாக்கில் 900 பயங்கரவாதிகளின் ஊடுருவல்' என மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறியதை கண்டித்து,
பழங்குடியின சமூகத்தினர் நேற்று முன்தினம் முதல் மூன்று நாட்களாக இங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இந்த இரு மாவட்டங்களிலும் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாததால் இங்குள்ள சாலைகள் ஆள் வெறிச்சோடி காணப்பட்டன.