வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லை: ராணுவம் - சி.பி.ஐ., வார்த்தை மோதல்
வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லை: ராணுவம் - சி.பி.ஐ., வார்த்தை மோதல்
UPDATED : செப் 26, 2024 12:15 AM
ADDED : செப் 25, 2024 11:53 PM

புவனேஸ்வர் : ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு, போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் - சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புவனேஸ்வரில் உள்ள பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கடந்த 15ம் தேதி நள்ளிரவு, ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி புகார் அளிக்க வந்தனர். குடி போதையில் போலீசாரை தாக்கியதாக, ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதன் பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி, 'போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர்கள் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். என் வருங்கால கணவரான ராணுவ அதிகாரியை லாக்கப்பில் அடைத்தனர். என் ஆடைகளை போலீசார் கிழித்தனர்' என, குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் மாநில அரசியலில் புயலை கிளப்பியதை அடுத்து, இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே.சிங் - சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
சமூக வலைதளத்தில் வி.கே.சிங் வெளியிட்ட பதிவில், 'போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி நடத்தப்பட்ட விதம் வெட்கக்கேடானது; கொடூரமானது. இந்த விவகாரத்தை ஒடிசா காவல் துறை கையாண்ட விதம் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் வெளியிட்ட பதிவு:
ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி குடி போதையில் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். மேலும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன், இன்ஜினியரிங் மாணவர்களுடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ரத்த பரிசோதனை செய்யவும் அவர்கள் மறுத்து விட்டனர். ஒரு தனிப்பட்ட ராணுவ அதிகாரியின் செயல்களுக்காக, ஒட்டுமொத்த காவல் துறையை குற்றஞ்சாட்டுவது முறையற்றது. இந்த நிலைப்பாட்டை வி.கே.சிங் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி, ஒரு குழுவினருடன் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

