ADDED : ஜன 24, 2025 07:02 AM

ஈட்டி எறியும் போட்டியில் சாதனை படைக்க கர்நாடகா வீரர் மனு காத்திருக்கிறார்.
கர்நாடகா, ஹாசன் மாவட்டம் பேலுாரை சேர்ந்தவர் டி.பி.மனு, 24. இவர், தனது 17 வது வயதில் ஈட்டி எறிதல் பயிற்சியை துவங்கினார். இவருக்கு காசிநாத் நாயக் என்பவர் பயிற்சி அளித்து உள்ளார். அப்போது மனு, அதிக எடையுடன் காணப்பட்டார்.
இதனால், அவரால் சரியாக பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும், பயிற்சியாளர் நாயக், மனுவை அழைத்து அவருக்கு அறிவுரை கூறி உள்ளார்.
கடினமான பயிற்சிகளின் மூலம் மனு சிறப்பாக செயல்பட ஆரம்பித்து உள்ளார். பின்னர், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, தனது ஈட்டி ஏறியும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். சிறப்பு பயிற்சிக்காக புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்திற்கு சென்று பயிற்சி பெற்றார்.
இதன் மூலம் மாநில அளவிலான போட்டிகளில் சாதிக்க துவங்கினார். 2022 ம் ஆண்டு நடந்த மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 84.35 மீட்டர் துாரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் மனுவின் பெயர் மாநிலத்தை தாண்டி, தேசிய அளவில் பிரபலமானது.
மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தாலும், தேசிய அளவில் கால் தடத்தை பதிக்க காத்து கொண்டிருந்தார்.
அப்போது, 2023ம் ஆண்டு நடந்த உலக அளவிலான தடகளப்போட்டியில் இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இதில் இறுதிப்போட்டி வரை தேர்வானார். இறுதிப்போட்டியில் 84.15 மீட்டர் துாரத்திற்கு ஈட்டி எறிந்து, ஆறாவது இடத்தை பிடித்தார்.
ஆறாவது இடம் பிடித்ததால் துவண்டு போகாமல் மீண்டும் கடின பயிற்சிகளை மேற்கொண்டார். 2024ம் ஆண்டு நடந்த தைவான் தடகள ஓபன் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தியாவில் நடந்த 'பெடரேஷன் கப்' ஈட்டி எறிதல் போட்டியில் 82.06 மீட்டர் துாரம் ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். இந்த போட்டியில் தான், நீரஜ் சோப்ரா பிடித்து முதலிடத்தை பிடித்தார்.
உலக அளவில் பதக்கங்களை வென்றாலும், ஒலிம்பிக் பதக்கம் வாங்க வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்து உள்ளார்.
தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
- நமது நிருபர் -

