நெருக்கடியான நேரத்தில் மீட்பு பணியில் உதவிய ராணுவம்: குவிகிறது பாராட்டு
நெருக்கடியான நேரத்தில் மீட்பு பணியில் உதவிய ராணுவம்: குவிகிறது பாராட்டு
ADDED : ஆக 28, 2025 04:04 PM

புதுடில்லி: நாட்டில் நெருக்கடியான நேரத்தில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க உறுதி எடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று(ஆகஸ்ட் 27) பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள லாசியன் பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நிலையில் இந்திய ராணுவம் மீட்புப்பணியில் இறங்கியது.
இது தொடர்பாக இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளதாவது:
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு தகவல் கிடைத்ததும்,
ஒரு துணிச்சலான மீட்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் ராணுவத்தின் 3 சீட்டா ஹெலிகாப்டர்களின் தீவிரமிக்க செயல்பாட்டினாலும், வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாகவும், 27 பேரை வெற்றிகரமாக வெளியேற்ற முடிந்தது.
நெருக்கடியான சமயத்தில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும், வழங்க ராணுவம் உறுதி ஏற்றுள்ளது.
இவ்வாறு இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்டு மக்கள் உயிரை காப்பாற்றிய ராணுவத்தினரின் செயலை பொதுமக்கள், அரசு அதிகாரிகள், நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.