ADDED : ஜூன் 30, 2026 03:52 AM
புதுடில்லி: மத்திய அரசின், 'ஆரோக்கிய சேது 2.0' செயலியை, மத்திய சுகாதார அமைச்சர் நட்டா நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2020ல் நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்நிலையில், இந்த செயலியின் அடுத்த வடிவமான, 'ஆரோக்கிய சேது 2.0' செயலியை மத்திய அரசு நேற்று தொடங்கியது. டில்லியில் நடந்த விழாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான நட்டா இந்த செயலியை தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இந்த செயலி, தனிநபர்களின் சுகாதார பதிவுகளுக்கான டிஜிட்டல் தளமாக செயல்படும். 'ஆயுஷ்மான் பாரத்' டிஜிட்டல் இயக்கத்துடன் இணைந்த இந்த செயலி, குடிமக்கள் பல்வேறு சுகாதார சேவைகளை அணுக ஒரே டிஜிட்டல் நுழைவாயிலை வழங்குகிறது.
இதில், 'அபா' எனப்படும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண்களை உருவாக்குதல், சுகாதார பதிவுகளை நிர்வகித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். 'ஜன் ஆரோக்கிய யோஜனா'வின் கீழ், தனிநபர் மற்றும் குடும்ப சுகாதார காப்பீட்டு தொகை குறித்த விபரங்களும் இதில் உள்ளன.
இதய துடிப்பு, உடலில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த விபரங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் சுகாதார விபரங்களை இந்த செயலியில் நிர்வகிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
