வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க பிலிகுளா மிருகக்காட்சி சாலையில் ஏற்பாடு
வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க பிலிகுளா மிருகக்காட்சி சாலையில் ஏற்பாடு
ADDED : மார் 18, 2025 05:08 AM

மங்களூரு: பிலிகுளா மிருகக்காட்சி சாலையில், வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்படும் விலங்குகளுக்கு டேபிள் மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் வெப்பக்காற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள, குளிர்பானம், இளநீர், மோர், லஸ்சி உள்ளிட்ட பானங்களை அருந்துகின்றனர்.
ஆனால் விலங்குகளோ வெப்பத்தைத் தாங்க முடியாமல் தத்தளிக்கின்றன.
மங்களூரில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிலிகுளா மிருகக்காட்சி சாலையில் ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றன.
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்துள்ளனர். விலங்குகள் நடமாடும் பகுதிகளில், குடிநீர் தாராளமாக கிடைக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்.
வெப்பம் அதிகமாக இருக்கும்போது, குழாய்கள் மூலமாக விலங்குகளின் உடல் மீது தண்ணீர் தெளிக்கின்றனர். தினமும் இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றுகின்றனர்.
புலிகள் வசிக்கும் கூண்டுகளில் டேபிள் மின் விசிறி பொருத்தப்பட்டுள்ளது. மேலிருந்து தண்ணீர் பாயும் வகையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
இதனடியில் விலங்குகள் நின்று உடலை நனைத்துக் கொள்கின்றன. ஆங்காங்கே குளங்கள், தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சில விலங்குகளின் கூண்டுகள் மீது, வெள்ளை நிற பெயின்ட் பூசப்பட்டுள்ளது. இந்த வெள்ளை நிறம், வெயிலை உறிஞ்சிக் கொண்டு, வெப்பத்தை உள்ளே கடத்துவதில்லை.
சில கூண்டுகளின் கூரை மீது, தென்னங்கீற்றுகள் போடப்பட்டுள்ளன. பாம்புகளுக்கும் மேலிருந்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
இதனால் வெப்பமான சூழ்நிலையில் இருந்து விலங்குகள் ஓரளவு தப்பித்து வருகின்றன.