வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்: 'ஆன்லைனில்' நிரப்ப ஏற்பாடு
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்: 'ஆன்லைனில்' நிரப்ப ஏற்பாடு
ADDED : நவ 10, 2025 04:25 AM

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தை, 'ஆன்லைன்' வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாக்காளர்கள் வசதிக்காக, தேர்தல் கமிஷன் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in வழியே, கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
இணையதள பக்கத்தில் இருக்கும் ''fill enumeration form'' என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே, இவ்வசதியை பயன்படுத்த இயலும்.
சரியான விபரங்களை சமர்பித்த பின், இணைய பக்கமானது ' e-sign' என்ற பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவு சொல் அனுப்பப்படும். அந்த கடவு சொல்லை உள்ளிட்டவுடன் படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.

